ஐஎஸ்ஐ தொடர்புடைய ஷெசாத் பட்டி குழு பயங்கரவாத அமைப்பு; உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுடில்லி: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஷெசாத் பட்டி குழுவை பயங்கரவாத அமைப்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவன் ஷெசாத் பட்டி. பாக்.ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்த இவன், தன்னை சமூகவலை தள பிரபலமாக முன்னிறுத்தியவன். அதன் வாயிலாக இந்திய இளைஞர்களை மூளைச்சலவை செய்து தமது குழுவில் இணைக்கும் வேலைகளை செய்து வருபவன்.
சுதந்திர தினத்தின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த ஷெசாத் பட்டி திட்டமிட்டதை கண்டுபிடித்த மத்திய உள்துறை அமைச்சகம், ஆக.12ம் தேதி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சோதனை நடத்த உத்தரவிட்டது.
இந்த சோதனையில் 200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் பயங்கரவாத சதி திட்டங்கள் முறியடிக்கப்பட்டு ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆயுதங்கள் அனைத்தும் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.
இந் நிலையில், ஷெசாத் பட்டி குழுவை பயங்கரவாத அமைப்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அதற்கான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் விவரம் வருமாறு;
பயங்கரவாதத்தை எந்த தருணத்திலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்பது பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை. அது தொடரும் வகையில், உள்துறை அமைச்சகமானது ஷெசாத் பட்டியின் குழுவை சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
இந்த குழுவானது இளைஞர்களையும், சிறிய குற்றவாளிகளையும் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக தூண்டுவதோடு, எல்லைகள் கடந்து ஆயுதங்கள்,வெடி பொருட்கள், போதை பொருட்கள் கடத்துவதில் ஈடுபட்டுள்ளது. நாட்டின் கட்டமைப்பு, மத நல்லிணக்கத்தை குறி வைத்துள்ள இந்த கும்பல் வெறுப்புணர்வை தூண்டும் டிஜிட்டல் பதிவுகளையும் வெளியிட்டு உள்ளது.
இவ்வாறு உள்துறை அமைச்சக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.