Arts, culture, entertainment and media
Mini திரை: ‘மகாநதி’ லஷ்மி பிரியா - சாமிநாதன் சிங்கப்பூர் நிகழ்ச்சி ரத்து!

விஜய் டி.வி-யில், ‘பிக் பாஸ் சீசன் 10’ அமர்க்களமாகத் தொடங்கியிருக்கிறது
‘மகாநதி’ சீரியல் முடிந்ததில் அந்தத் தொடரில் நடித்த லஷ்மி பிரியா - சாமிநாதன் ஜோடியும், அவர்களின் ரசிகர்களும் ரொம்பவே வருத்தத்தில் இருந்தனர். இந்த நிலையில், இந்த சீரியல் டீம் தங்கள் ரசிகர்களுக்காக ஃபேர்வெல் ஷோ ஒன்றை சிங்கப்பூரில் நடத்தத் திட்டமிட்டு அதற்கான வேலைகளும் மும்முரமாக நடந்தன. ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை கடைசி நேரத்தில் நிகழ்ச்சி ரத்தாகிவிட்டதாம். நிகழ்ச்சி ரத்தானதற்கு, தாங்கள் காரணமில்லாதபோதும் தங்களுடைய ரசிகர்களிடம் உருக்கமாக மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள் இருவரும்.
சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கென பிரத்யேகமாக தொடங்கப்பட்ட யூடியூப் சேனல் ‘சின்னத்திரை டிஜிட்டல்’. இது தொடங்கிய சில நாட்களிலேயே ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர்களைத் தாண்டிவிட்டது. இதனால் சீரியல் நடிகர் நடிகைகள் பலரும் அந்தச் சேனலில் முகம் காட்ட ஆர்வமாக இருக்கிறார்களாம்.
வெப் சீரீஸ் ஏரியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் ‘ரிசார்ட்' சீரீஸில் ரிசார்ட் அதிபராக நடித்திருக்கும் இளங்கோ குமணன், ஹிப் ஹாப்’ஆதி இயக்கிய `சிவகுமாரின் சபதம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அப்போது அவருக்கு வயது 60. ஆனாலும் வயதை ஒரு பொருட்டாகக் கருதாமல் தொடர்ந்து கலை தொடர்பான தேடலில் ஆர்வம் காட்டிவருகிறார். தற்போது சென்னை சபா நாடகங்கள் குறித்த ஆய்வை முடித்து டாக்டரேட் வாங்கியிருக்கிறார்.
விஜய் டி.வி-யில், ‘பிக் பாஸ் சீசன் 10’ அமர்க்களமாகத் தொடங்கியிருக்கிறது. இதற்காக, சென்னை பூந்தமல்லியில் அமைக்கப்பட்டிருக்கும் ‘பிக் பாஸ்’ வீட்டில் இந்த முறை பெரிதாக மாற்றங்கள் எதையும் செய்யவில்லை. கடந்த சீசன்களை ஒப்பிடுகையில் நீச்சல்குளத்தைச் சிறியதாக்கிவிட்டார்கள். `கார்டன் ஏரியா’ எனப்படும் பகுதியில் மருந்துக்குக்கூடச் செடிகள் கிடையாது. வெயில் கொளுத்துமென்பது தெரிந்தோ, என்னவோ விளம்பர நிறுவனத்தின் சோலார் தகடுகளை அங்கு பதித்து வைத்திருக்கின்றனர்.
‘கம்’முன்னு கேட்டுக்குங்க...
மீடியா, சோஷியல் மீடியா என எல்லா ஏரியாக்களிலும் எவ்வளவுதான் பெயர் ரிப்பேர் ஆனாலும் அதையெல்லாம் சட்டை செய்வதே இல்லையாம் அந்த சமையல் நடிகர். நிகழ்ச்சிகளில் அறிமுகமாகும் பெண்களின் அலைபேசி எண் கிடைத்துவிட்டால், ‘குட் மார்னிங்’, ‘குட் நைட்’, ‘டி.பி நல்லா இருக்கு’ போன்ற மெசேஜுகளைத் தொடர்ந்து தட்டிவிட்டபடியேதான் இருக்கிறாராம்.
