Sport
வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்.. பி.எஸ்.எல் தொடர் குறித்து கடும் விமர்சனம்..

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக 2010 முதல் 2017 வரை பணியாற்றி 2 ஐபிஎல் கோப்பைகளை வெல்ல வாசிம் அக்ரம் உதவியாக இருந்தார்
இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்ஷியைப் பாராட்டியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
15 வயதே ஆன இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்ஷி, தனது அதிரடியான பேட்டிங் மூலம் சர்வதேச கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய தேசிய அணியில் அறிமுகமாகி, மிகக் குறைந்த வயதில் சர்வதேச போட்டியில் அறிமுகமான வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்த நிலையில் ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) ஆகிய இரண்டு தொடர்களிலுமே ஆலோசகராகவும் பயிற்சியாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட வாசிம் அக்ரம் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
"பிஎஸ்எல் தொடர் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இந்த 10 ஆண்டுகளில் ஒரே ஒரு திறமையான பேட்டரையாவது பிஎஸ்எல் உருவாக்கியுள்ளதா? சில பந்துவீச்சாளர்களை நாம் உருவாக்கியிருக்கலாம். ஆனால் குறிப்பிடத்தக்க பேட்டிங் திறமையாளர்களை நாம் உருவாக்கியிருக்கிறோமா என்று சொல்லுங்கள்?
இந்தியாவில் உருவாகியுள்ள 14-15 வயது சிறுவனைப் போன்ற (வைபவ் சூரியவன்ஷி) ஒரு பேட்டிங் திறமையை நாம் உருவாக்கும் போது தான், நம்முடைய கிரிக்கெட்டில் முன்னேற்றம் ஏற்படும்" என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு உள்ளூர் கிளப் கிரிக்கெட் கலாச்சாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று வாசிம் அக்ரம் வலியுறுத்தியுள்ளார். திறமையான இளம் வீரர்களைக் கண்டறிய கிளப் கிரிக்கெட்டே முதன்மையானது என்றும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) கராச்சி மற்றும் லாகூர் ஆகிய நகரங்களில் கிளப் கிரிக்கெட்டை மேம்படுத்த தலா 10 கோடி ரூபாயைச் செலவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக 2010 முதல் 2017 வரை பணியாற்றி 2 ஐபிஎல் கோப்பைகளை வெல்ல உதவிய அக்ரம், பிஎஸ்எல் தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட், முல்தான் சுல்தான்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் ஆகிய அணிகளின் ஆலோசகராக இருந்துள்ளார்.
