Arts, culture, entertainment and media
“உங்களுடைய குரலில் தனித்துவமான தெய்வீக சக்தி இருக்கிறது” - ராஷ்மிகா மந்தனா

'இசை மேதை', 'பாரத ரத்னா' எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் திரைப்படம் 'எம். எஸ்.: எ லெகசி ஆன் ஸ்கிரீன்(M.S. : A LEGACY ON SCREEN). இப்படத்தை தேசிய விருது வென்ற இயக்குநர் கௌதம் தின்னனூரி இயக்குகிறார். இதில் எம். எஸ். சுப்புலட்சுமியாக ரஷ்மிகா மந்தானா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ்- ராக் லைன் என்டர்டெய்ன்மென்ட் - பென்னி வாசு பிலிம்ஸ் - ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த் - ராக்லைன் வெங்கடேஷ்- பென்னி வாசு ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் தொடக்க விழா எம் எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இசை அரங்கமாக திகழ்ந்த சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமி அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் எம் .எஸ். சுப்புலட்சுமியின் குடும்ப வாரிசுகளும் , அவருடைய நலம் விரும்பிகளும், திரை உலகத்தை சார்ந்த தயாரிப்பாளர்களும், முன்னணி நட்சத்திர நடிகர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய திரையுலகின் நட்சத்திர நடிகருமான கமல்ஹாசன் கிளாப் அடித்து, படத்தை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் எம். எஸ். சுப்புலட்சுமியின் இனிமையான குரலில் ஒலித்த பாடல்களை.. இசை கலைஞர்கள் ஒன்றிணைந்து இசைத்து, அவருக்கு இசையஞ்சலியும் நடத்தினர்.
நிகழ்வில் ராஷ்மிகா மந்தனா பேசுகையில், “எனக்கு தற்போது என்னுடைய மனதில் ஒரே ஒரு ஃபீலிங்ஸ் தான் இருக்கிறது. அது கிராட்டிடியூட் தான். எம் எஸ் அம்மாவின் சிறப்பு நாளான இன்று நீங்கள் அனைவரும் இங்கு ஒன்று கூடி இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இதற்கு நன்றி. ஹாப்பி பர்த்டே எம் எஸ் அம்மா. இன்று நாங்கள் எம் எஸ் அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம். இதை பார்த்து இந்த அரங்கத்தில் எங்கேனும் அமர்ந்து ரசிப்பீர்கள் என்றும்.. உங்களிடத்தில் சிறிய அளவில் புன்னகை இருக்கும் என்றும்.. நம்புகிறோம். அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி.
உங்களுடைய குரலில் தனித்துவமான தெய்வீக சக்தி இருக்கிறது. அதை கேட்கும் போதெல்லாம் எனக்கு கடவுள் முன் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு எழும். அம்மா உங்களுடைய வாழ்க்கையில் சிறிய பகுதியாக இருப்பதற்கு என்னை தேர்வு செய்து இருக்கிறீர்கள். இதற்காக நான் எப்போதும் உங்களுக்கு நன்றி கடன் பட்டவராக இருப்பேன். உங்களுடைய ஆசீர்வாதம் சதாசிவம் சாரின் ஆசீர்வாதம் சண்முக வடிவு அம்மாவின் ஆசிர்வாதம் உங்களுடைய குடும்பம் மற்றும் உங்களுடைய நலம் விரும்பிகளின் ஆசீர்வாதமும், வாழ்த்தும் எங்களுக்கும், எங்கள் குழுவினருக்கும் தேவை. என்னுடைய சிறந்த பங்களிப்பை இந்த படைப்பிற்காக வழங்குவேன் என உறுதி கூறுகிறேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)