Politics
“பா.ஜ.க.வின் நீண்டகாலப் போராட்டத்திற்கு ஒரு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது” - நயினார் நாகேந்திரன்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் விஷச்சாராயம் அருந்திய சுமார் 67 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. இத்தகைய சூழலில் தான் இந்த உயிரிழப்புகள் குறித்து முழுமையாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் விரிவான அறிக்கை அண்மையில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “அடுத்த தலைமுறையினரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் படிப்படியாகப் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்கலாம். அதே வேளையில், சட்டவிரோதக் கள்ளச்சாராய நடமாட்டத்தைத் தடுக்கவும், மாற்று ஏற்பாடாகவும் கள் இறக்கவும், கள் விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்குவதுடன், அதற்கு தகுந்த வரி விதிப்பது போன்றவற்றை அரசு பரிசீலிக்கலாம். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புச் சம்பவத்திற்கு உள்ளூர் காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் கடுமையான அலட்சியமே முக்கியக் காரணம் ஆகும். எனவே, கடமை தவறிய அதிகாரிகள் மீது உரிய துறைரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோகுல்தாஸ் ஆணையத்தின் இந்தப் பரிந்துரையைத் தமிழக விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் அமைப்புகள் வரவேற்றுள்ளன. அந்த வகையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “‘கள்’ இறக்கப் பரிந்துரைத்துள்ள நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கையை வரவேற்கிறேன்! எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள பதிவில், “மண்ணின் மணம் மாறாத மாண்பினைத் தழுவி, இயற்கை அன்னை தந்த கொடையான 'கள்' இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரையைத் தமிழக பாஜக சார்பில் மனமுவந்து வரவேற்கிறேன்.
மண்ணின் மைந்தர்களான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தவும், கிராமப்புறப் பொருளாதாரத்தில் புதிய ஒளியேற்றவும் இந்தப் பரிந்துரை ஒரு நல்வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை. இரசாயனக் கலப்புள்ள மது அரக்கனுக்கு எதிராக தமிழக பாஜக தொடுத்த அறப்போர்களில், "மக்களின் உயிரைக் குடிக்கும் நச்சு மதுவை ஒழித்து, மண்ணின் பானமான கள்ளை அனுமதிக்க வேண்டும்" என்ற முழக்கம் எப்போதும் ஓங்கி ஒலித்துள்ளது. கள்ளுக்கு ஆதரவாக நான் தொடர்ந்து வாதிட்டும் வந்துள்ளேன். இந்நிலையில் இன்றைய ஆணையத்தின் பரிந்துரை மூலம் பாஜகவின் நீண்டகாலப் போராட்டத்திற்கு ஒரு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது.
எனவே, விவசாயிகளின் வாடிய முகத்தில் புன்னகை பூக்கவும், கள்ளச்சாராய மரணங்கள் என்னும் கருநிழல் தமிழகத்தை விட்டு விலகவும், தவெக அரசு இந்தப் பரிந்துரையை வெறும் காகிதத்தோடு நிறுத்திவிடக் கூடாது. காலம் தாழ்த்தாமல், உரிய பாதுகாப்பு விதிகளுடன் கள் இறக்கவும், சந்தைப்படுத்தவும் உடனடியாக அனுமதி வழங்கி, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் 'வசந்தத்தை' ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழக முதல்வர் விஜய்யை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)