குண்டூர்-திருப்பதி ரயில் திருச்சி வரை நீட்டிப்பு: விருத்தாசலம் பக்தர்கள், பயணிகள் மகிழ்ச்சி

விருத்தாசலம்: குண்டூர் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி வரை நீட்டித்து ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளதால், விருத்தாசலம் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையம் வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும் என பொது மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து விஷ்ணுபிரசாத் எம்.பி., பாராளுமன்றத்தில் பேசியதோடு, ரயில்வே அமைச்சரிடம் கடிதம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், குண்டூர் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலை (17261), குண்டூர் - திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலாக (17261) நீட்டிப்பு செய்து ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ரயில், மறுமுனையில் திருச்சி - குண்டூர் எக்ஸ்பிரஸ் (17262) ரயிலாக செல்கிறது. இதன் மூலம் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு நேரடி ரயில் சேவை கிடைத்துள்ளது.
அதன்படி, குண்டூர் ரயில் நிலையத்தில், தினசரி மாலை 4:30 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு திருப்பதி ரயில் நிலையம் வந்து, 4:05க்கு புறப்படும். அங்கிருந்து காட்பாடிக்கு காலை 7:10 மணிக்கு வந்து, 7:15 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2:15 மணிக்கு திருச்சி சென்றடையும்.
மறுமுனையில், திருச்சி ரயில் நிலையத்தில் மாலை 4:00 மணிக்கு புறப்பட்டு, காட்பாடிக்கு இரவு 9:20 மணிக்கு சென்று 9:25க்கு புறப்படும். திருப்பதிக்கு இரவு 11:40க்கு சென்று, 11:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11:20 மணிக்கு குண்டூர் சென்றடையும்.
நீட்டிக்கப்பட்ட இந்த ரயில், அரியலுார், விருத்தாசலம், விழுப்புரம், திருக்கோவிலுார், திருவண்ணாமலை, போளூர், ஆரணிரோடு, வேலுார் கோட்டை, காட்பாடி, சித்துார், பகாலா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
இந்த ரயில் தினசரி இயக்கப்பட உள்ள நிலையில், அதற்கான துவக்க தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இத்தகவலை, ரயில்வே வாரிய இயக்குனர் (பயிற்சி) சஞ்சய் ஆர்.நீலம் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் புரட்டாசி மாதம் துவங்க உள்ள நிலையில், விருத்தாசலம் வழியாக திருப்பதிக்கு ரயில் சேவை கிடைத்துள்ளதால் ஏழுமலையானுக்கு விரதமிருந்து செல்லும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்பு, விழுப்புரம் சென்று, அங்கிருந்து திருப்பதிக்கு ரயிலில் சென்ற நிலையில், நேரடி ரயில் சேவை, நேர விரயத்தை தவிர்த்துள்ளது.