போலீஸ் செய்திகள்
* ராணுவ வீரருக்கு ஆறு மாதம் சிறை திருமங்கலம்: பேரையூர் அரசமரம் முக்கு ரோடு பகுதி ராஜேஷ் கண்ணன் 25, ராணுவ வீரர். இவர் 2012ல் பேரையூர் விஜயராணி திருமண மண்டபம் அருகே மது போதையில் தகராறு செய்தார். விசாரணைக்கு சென்ற போலீசார் நல்லதம்பி, முத்துக்குமரனை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பேரையூர் போலீசார் வழக்கு பதிந்தனர்.
திருமங்கலம் சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. அரசு வழக்கறிஞர் மூவேந்திரன் ஆஜரானார். இதில் ராஜேஷ் கண்ணன் மீது பதிவான கொலை முயற்சி பிரிவுகளில் விடுதலை செய்யப்பட்டார். பொது இடத்தில் அத்துமீறியது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக ஆறு மாதம் சிறை மற்றும் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பிரபாகரன் தீர்ப்பளித்தார்.
* திருமண நேரத்தில் மணமகள் கடத்தல் திருமங்கலம்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சுந்தரங்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண பெருமாள் 27. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணும் 2 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். நேற்று காலை கப்பலுார் பெருமாள் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்ததும், புதுமணஜோடி கப்பலுார் தேவர் சிலை பகுதியில் உறவினர்கள் சிலருடன் சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தங்கள் மகளை காணவில்லை என பெற்றோர் காரியாபட்டி போலீசில் புகார் அளித்திருந்தனர். விசாரித்த போலீசார் அலைபேசி ‘டவர் லொகேஷன்’ அடிப்படையில் பெண்ணைத் தேடி கப்பலுார் வந்தனர். அங்கு மணக்கோலத்தில் இருந்த பெண்ணை அழைத்து விசாரணை நடத்தினர். திருமணம் நடந்த நேரத்தில் பெண்ணை கடத்திச் சென்றதாக மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் புகார் தெரிவித்ததால், இந்த விசாரணை நடந்தது என போலீசார் தெரிவித்தனர்.
* நகை திருட்டு திருமங்கலம்: கள்ளிக்குடி கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் மனைவி விஜயலட்சுமி 42, தற்போது சென்னை பரணி புத்துார் பகுதியில் வசிக்கின்றனர். ஆக. 31ல் தனது சொந்த ஊரான கள்ளிக்குடியில் மகனுக்கு காதணி விழா வைத்திருந்தனர். விழா முடிந்த பின் தனது பத்தரை பவுன் தங்க நகைகளை வீட்டில் வைத்திருந்தார். இரு நாட்கள் கழித்து சென்னை கிளம்பும்போது நகையை பார்த்தபோது காணாமல் போனது தெரிந்தது. கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
* புள்ளி மான் மீட்பு திருமங்கலம்: கள்ளிக்குடி அய்யாவூரணி அருகே காட்டுப் பகுதியில் தண்ணீர் குடிப்பதற்காக வந்த 4 வயது புள்ளிமான் ஒன்று வழி தவறி கிராமத்திற்குள் வந்தது. அந்த மானை தெரு நாய்கள் கூட்டமாக துரத்தி சென்றன. சரமாரியாக கடித்துக் குதறியதில் மானின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த சில கிராமத்து இளைஞர்கள் நாய்களை விரட்டி மானை மீட்டனர். மீட்கப்பட்ட மானுக்கு தண்ணீர், உணவு கொடுத்து பாதுகாத்த இளைஞர்கள், சாப்ட்டூர் வனச்சரக அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். நாய்கள் கடித்ததில் பலத்த காயம் அடைந்த மானுக்கு சாப்டூர் வனச்சரக அலுவலகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.