Arts, culture, entertainment and media
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் விபத்து: கார் தீக்கிரையானது

வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வைத்திருந்த கார் தீக்கிரையானது.
வேடசந்துார் பகுதியில் ஹிந்து மக்கள் கட்சி, ஹிந்து மகா சபா சார்பில் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. வேடசந்துார் - வடமதுரை ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனை முன் விழாக்குழுவினர் பட்டாசுகளை வெடித்து ஊர்வலத்தை துவக்கினர்.
அப்போது ரோட்டின் ஓரம் நிறுத்தியிருந்த பட்டாசுகளை கொண்டு வந்த காரில் தீப்பொறி விழுந்ததில் பற்றி எரிய துவங்கியது. அதில் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில்கார் முழுவதும் தீ பரவி கருகியது.
ஊர்வலத்தில் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வேடசந்துார் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். 20 நிமிடத்திற்குப்பின் ஊர்வலம் துவங்கியது. வடமதுரை ரோடு, சாலை தெரு, கடைவீதி வழியாக சென்று ஆத்துமேட்டில் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன.