Lifestyle and human interest
ஈரக்கழிவு உரமாகும்... மக்காத கழிவு சாலையாகும் குப்பை பிரிப்பு... துாய்மை சிறப்பு

திருப்பூர்: வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பை இனி ஒரே இடத்தில் குவிவதில்லை. ஈரக்கழிவு, பிளாஸ்டிக், சுகாதார கழிவு, மின்னணு கழிவு என நான்கு வகையாக பிரித்து வழங்கும் புதிய நடைமுறை, கிராமப்புற திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய வழியை ஏற்படுத்தியுள்ளது.
துாய்மையான கிராமங்களை உருவாக்கும் நோக்கில், திருப்பூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 26 ஊராட்சிகளை குப்பையில்லா கிராமங்களாக மாற்றும் திட்டம் துவங்கியுள்ளது. ஆனால், இந்த மாற்றம் அந்த ஊராட்சிகளுடன் நின்றுவிடவில்லை. மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளுக்கும் புதிய திடக்கழிவு மேலாண்மை நடைமுறை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
வீடு வீடாக செல்லும் துாய்மை பணியாளர்கள் குப்பையை சேகரித்து தரம் பிரிக்கின்றனர். பின், அவை அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அனுப்பப்படுகின்றன. பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 1ம் தேதி முதல் நீண்ட நாட்களாக குவிந்திருந்த குப்பைகளையும் அகற்றும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
குப்பையில் இருந்து உரம் வீடுகளில் இருந்து தனியாக சேகரிக்கப்படும் ஈரக்கழிவுகளுக்கு இனி குப்பை மேடு மட்டும் முடிவல்ல. கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள உரக்குழிகளில் அவை கொட்டப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படுகின்றன.
சில ஊராட்சிகளில் இதற்காக விவசாயிகளே இடம் வழங்கியுள்ளனர். அவிநாசி - கருமாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரக்கழிவை உரமாக்கி விவசாய பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒருபுறம் ஈரக்கழிவு உரமாக மாற, மறுபுறம் பிளாஸ்டிக் மற்றும் பிற மக்காத கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு எடைபோட்டு வாகனங்களில் அனுப்பப்படுகின்றன. ஒன்றிய அளவில் செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் அரவை யூனிட்டுகளும் இதற்காக பயன்படுத்தப்பட உள்ளன.