Arts, culture, entertainment and media
கொட்டமேடு நீர்ப்பாசன கால்வாய் துார்வாரும் பணி தீவிரம்

திருப்போரூர்:கொண்டங்கி ஏரியிலிருந்து கொட்டமேடு வழியாக செல்லும் நீர்ப்பாசன கால்வாயை துார்வாரும் பணி நேற்று தொடங்கியது.
திருப்போரூர் ஒன்றியத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 63 ஏரிகள் உள்ளன. இதில், பெரிய ஏரிகளுள் ஒன்றாக கொண்டங்கி ஏரி விளங்குகிறது.
இந்த கொண்டங்கி ஏரி, 650 ஏக்கர் பரப்பு உடையது. இந்த ஏரி, 0.2 டி.எம்.சி., கொள்ளளவையும், 16.11 அடி ஆழம் கொண்டது. இந்த ஏரி நீரை நம்பி, நெல்லிக்குப்பம், அகரம், கொண்டங்கி, கீழூர், கொட்டமேடு, மேலையூர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராத்தினர் 2,000 ஏக்கரில் விவசாய பணி மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், திருப்போரூர் பேரூராட்சி பகுதி மக்களுக்கு கொண்டங்கி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து, குழாய் வாயிலாக குடிநீர் வினியொகிக்கப்படுகிறது.
இந்த கொண்டங்கி ஏரியிலிருந்து நெல்லிக்குப்பம், கொண்டங்கி, கொட்டமேடு வழியாக பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் முக்கிய நீர்ப்பாசன கால்வாய்கள் உள்ளன. இதனை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நெல்லிக்குப்பம், கொண்டங்கி வழியாக செல்லும் கால்வாய்கள் மட்டும் சீரமைக்கப்பட்டன.
கொண்டங்கி ஏரியிலிருந்து கொட்டமேடு வழியாக செல்லும் நீர்பாசன கால்வாய் துார்வாரி சீரமைக்கப்படாமல் சீரழிந்தது.
இதனால், கால்வாயில் செடிகள் வளர்ந்து தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டது. இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட கோட்டாட்சியரிடம் விவசாயிகள் இரு மாதங்களுக்கு கால்வாயை சீரமைக்க கோரினர்.
அதன்படி, நீர்வளத்துறை சார்பில், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொட்டமேடு நீர்ப்பாசன கால்வாயை துார்வாரி சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. பருவமழைக்கு முன் இப்பகுதியில் உள்ள கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.