Lifestyle and human interest
``இளைஞர்கள் வழிதவறிடாம போட்டித் தேர்வுக்குத் திருப்புறாங்க!’’ - நெல்லை காவல்துறையின் நல்ல முயற்சி!

குரூப் 4 தேர்வு, காவலர் தேர்வு, எஸ்.ஐ தேர்வு ஆகியவற்றுக்குத் தயாராகும் இளம் தலைமுறையினருக்குத் தேவைப்படும் புத்தகங்கள் இங்கு வைக்கப் பட்டுள்ளன. இணைய வசதி மட்டுமல்லாமல் வைஃபை வசதியும் இலவசமாகச் செய்து கொடுத்திருக்கிறோம்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணிகளில் சேருவதற்கு உதவும் வகையில், நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ‘காவல் படிப்பகம்’ அமைக்கப்பட்டுள்ளது பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது,
`தென்னகத்தின் ஆக்ஸ்ஃபோர்டு’ என வர்ணிக்கப்படும் பாளையங்கோட்டையில் அமைந்திருக்கிறது, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம். அந்த அலுவலகத்தைச் சுற்றிலும் கல்லூரிகள் இருப்பதால் எப்போதும் மாணவ, மாணவியரின் கூட்டம் நிறைந்திருக்கும். அவர்களுக்கு உதவும் வகையில் படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட எஸ்.பி-யான விஸ்வேஷ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி முயற்சியில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் படிப்பகத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
“பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களை வாங்க முடியாத சூழல் உள்ளது. அவர்களின் எதிர்காலக் கனவுக்கு உதவும் வகையில் இந்த படிப்பகம் உதவியாக இருக்கும்” என்கிறார், எஸ்.பி-யான விஸ்வேஷ் சாஸ்திரி.
மேலும், அவர் “குரூப் 4 தேர்வு, காவலர் தேர்வு, எஸ்.ஐ தேர்வு ஆகியவற்றுக்குத் தயாராகும் இளம் தலைமுறையினருக்குத் தேவைப்படும் புத்தகங்கள் இங்கு வைக்கப் பட்டுள்ளன. இணைய வசதி மட்டுமல்லாமல் வைஃபை வசதியும் இலவசமாகச் செய்து கொடுத்திருக்கிறோம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தப் படிப்பகம் திறந்திருக்கும். அதனால் கல்லூரி மாணவர்கள், கல்லூரி முடிந்த பின்னர்கூட வந்து பயன்படுத்திக் கொள்ளலாம். வார இறுதி நாள்களில் சிறப்பு பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று இளைஞர்களை வரவேற்றார்.
மாவட்ட காவல்துறையுடன் இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் ‘மை பாரத்’ அமைப்பு இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. சில தன்னார் வலர்களும் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு உதவுகிறார்கள். இந்த மையத்தில், போட்டித் தேர்வுகளின் தன்மை, தேர்வு முறைகள், பாடத்திட்டம், நேர மேலாண்மை, பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மாணவர் களுக்குப் பயிற்சி மற்றும் வழிகாட்டு தல்கள் வழங்கப்படுவதால் ஆர்வத் துடன் இந்தப் படிப்பகத்துக்கு வருகிறார்கள்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், எற்கெனவே பயன்பாட்டில் இருந்த காத்திருப்போர் அறை, நவீன வசதிகளுடன் மாணவர்கள் படிக்கும் அறையாக மாற்றப்பட்டுள்ளது. கூடுதல் மாணவர்கள் வந்தால் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தற்காலிக அறையும் அமைக்கப்பட்டுள்ளது. அமைதியான சூழலில் மாணவர்கள் படிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.
படிப்பகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த மாணவர்களிடம் பேசினோம். “கல்லூரிக்கு அருகிலேயே இப்படியொரு வாய்ப்புக் கிடைத்திருப்பதை வரவேற்கிறோம். எஸ்.பி அலுவலகத்தில் படிப்பகம் இருப்பதால் மாணவிகள் அச்சமின்றி வந்து செல்கிறோம். புத்தகங்கள் மட்டுமல்லாமல். ஆன்லைன் மூலம் படிக்கும் வகையில் இணையம், வைஃபை வசதியும் இலவசமாகக் கிடைக்கிறது. இளைய சமுதாயத்தினர் தவறான வழிக்குச் செல்லாமல் அவர்களைக் கல்வியை நோக்கித் திருப்பும் வகையில் காவல்துறை மேற் கொண்டிருக்கும் இந்த முயற்சி எங்களுக்கு வரப்பிரகாசமாக அமைந்திருக்கிறது” என்கிறார்கள் நன்றியுடன்.
இளைய சமூகத்தின் கல்வி மற்றும் முன்னேற்றத்துக்குத் துணை நிற்கும் வகையில் நெல்லை மாவட்ட காவல்துறையினர் மேற் கொண்டிருக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது!
