பன்றிக்கு வைத்த வெடி மிதித்த சிறுமி காயம்
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே பன்றிக்கு வைத்த வெடியை மிதித்த சிறுமி காயம் அடைந்தார்.
கடலுார் மாவட்டம், வேப்பூர் தாலுகா, ஜா.ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன் மகள் நிஷாந்தனா, 7; இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், அசகளத்துாரில் உள்ள துவக்கப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை இயற்கை உபாதைக்காக நிஷாந்தனா அசகளத்துாரில் விளைநில பகுதிக்குச் சென்றார்.
அங்கு நிலத்தில் இருந்த பன்றிக்கு வைத்த வெடியை மிதித்துள்ளார். பலத்த சத்தத்துடன் வெடித்ததில், நிஷாந்தனாவின் காலில் பலத்த காயமும், எலும்பு முறிவும் ஏற்பட்டது.
தகவலறிந்த அவரது குடும்பத்தினர் நிஷாந்தனாவை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.