கூட்டுறவு வங்கி தலைவர் பதவிக்கு கடும் போட்டி
பெங்களூரு: கூட்டுறவு தலைமை வங்கி தலைவர் பதவியை கைப்பற்ற, காங்கிரசில் கடும் போட்டி எழுந்துள்ளது.
கர்நாடக அரசின் கூட்டுறவு துறையின் தலைமை வங்கி பெங்களூரில் இதன் தலைவராக இருந்த பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., பெல்லி பிரகாஷ் பதவி காலம், கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. புதிய தலைவரை தேர்வு செய்ய, கடந்த ஜனவரி மாதம் தேர்தல் நடப்பதாக இருந்தது.
அப்போதைய முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ராஜண்ணா, தற்போதைய முதல்வர் சிவகுமாரின் ஆதரவாளர் எம்.எல்.சி., ரவி இடையில் தலைவர் பதவிக்காக போட்டி எழுந்தது.
எனினும், உட்கட்சி பிரச்னை காரணமாக தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்காமல் போனது.
இந்நிலை யில், நாளை வங்கி தலைவரை தேர்வு செய்ய தேர்தல் நடக்க உள்ளது. வங்கியின் 21 இயக்குனர்கள் ஒருமனதாக தலைவரை தேர்வு செய்ய உள்ளனர்.
ஆனாலும், காங்கிரசின் ராஜண்ணா, ரவி உள்ளிட்டோர் இடையில் தலைவர் பதவிக்காக போட்டி எழுந்துள்ள நிலையில், பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட எல்லாபூர் எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பாரும் தலைவர் பதவி மீது கண் வைத்துள்ளார்.
முதல்வர் சிவகுமாரை, சதாசிவநகரில் உள்ள வீட்டில் நேற்று சந்தித்து பேசினார். 'மூன்று முறை வங்கியின் இயக்குனராக இருந்துள்ளேன். எனக்கு தலைவர் பதவி கொடுத்தால் திறம்பட நிர்வகிப்பேன்' என்று கூறியுள்ளார். சிவராம் ஹெப்பாருக்கு, பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட யஷ்வந்த்பூர் எம்.எல்.ஏ.,வும் ஆதரவு தெரிவித்துள்ளார்.