கிடப்பில் வேப்பூரில் சூரிய மின் வேலி அமைக்கும் பணி கிடப்பில்: தடையாக இருப்போர் மீது விவசாயிகள் அதிருப்தி

வேப்பூர்: வேப்பூர் அருகே வனத்தையொட்டி சூரிய மின்வேலி அமைக்கும் பணி கிடப்பில் இருப்பதற்கு காரணமானஅரசியல் பிரமுகர், வனத்துறையினர் மீது விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். வேப்பூர் அடுத்த காட்டுமயிலூர் மற்றும் கிருஷ்ணாபுரத்தில், 55 சதுர கி.மீ., சுற்றளவில் 6,112 ஏக்கர் பரப்பில் அரசுக்கு சொந்தமான வனப்பகுதி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூரில் துவங்கி, வேப்பூர் கூட்டுரோடு வழியாக பெரியநெசலூர், அடரி, அரசங்குடி வரை வனப்பகுதி உள்ளது. இங்கு, மான், எறும்பு திண்ணி, குரங்கு, காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்ட வன உயிரினங்கள் வசிக்கின்றன. அவற்றின் உணவிற்கு புங்கை, நாவல் உட்பட பல வகை மரங்கள், பழச்செடிகள் உள்ளன. குடிநீருக்கு கான்கிரீட் தொட்டிகள், தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வனத்தையொட்டியுள்ள, 45க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆண்டுதோறும் மக்காச்சோளம், வரகு, நெல், மரவள்ளி, வேர்க்கடலை பயிர்களை சாகுபடி செய்கின்றனர். இந்நிலையில், வன விலங்குகள் உணவு, குடிநீருக்காக வனத்தை விட்டு வெளியேறி, விவசாய நிலங்களுக்குள் புகுந்து சாகுபடி பயிர்களை நாசம் செய்கின்றன. இதனால், ஆண்டுதோறும் வன விலங்குகளால் விவசாயிகள் பாதிக்கின்றனர்.
இதனை தடுக்க, வனத்தையொட்டி மின்வேலி அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதில், வேப்பூர் அடுத்த பெரியநெசலூரைச் சேர்ந்த விவசாய ஆர்வலர்கள் குழு, கடந்த 2021ல் இருந்து கலெக்டர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கடந்த 2023ல் அப்போதைய கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட கனிம வளம் மூலம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, 10.2 கி.மீ., தூரம் சூரிய மின் வேலி அமைக்க உத்தரவிட்டார். இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த 'ஐபெண்ஸ்' நிறுவனம் சூரிய மின் வேலி அமைக்கும் பணியை மேற்கொண்டது. கடந்த 2023ல் துவங்கிய திட்டப்பணி 6.5 கி.மீ., தூரம் சூரிய மின் வேலி அமைத்து பாதியில் நின்றது. அதன்பின், கடந்த 3 ஆண்டுகளாக சூரிய மின் வேலி அமைக்கும் பணி நடக்காமல் கிடப்பில் உள்ளது. இது குறித்து விவசாயிகள் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை.
திட்டப்பணி முழுமை பெறாத நிலையில், சூரிய மின்வேலிக்கான பேட்டரிகள் திருடு போவது, பராமரிப்பின்றி கம்பி வேலி சேதமடைந்து வருகிறது. இதனால், சூரிய மின் வேலி அமைக்கும் திட்டப்பணிக்கான வரிப்பணம், விவசாய விளை பொருட்கள் வீணாவதால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
இது குறித்து பெரியநெசலூரைச் சேர்ந்த விவசாய ஆர்வலர்கள் குழு நிர்வாகி கூறியதாவது.,
மூன்று ஆண்டுகளாக பல கலெக்டர்களிடம் மனு அளித்து சூரிய மின் வேலி அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்தோம். ஆனால், திட்டப்பணிகள் முழுமை பெறாமல் கடந்த 3 ஆண்டுகளாக பாதியில் நிற்கிறது. சூரிய மின் வேலி அமைக்காத 4 கி.மீ., தூரத்தில், 2 கி.மீ., தூரம் கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையொட்டி, வனத்தில் அமைக்க வேண்டும். இதற்கு வனத்துறை அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை.
அரசியல் பிரமுகர் ஒருவரும், வனத்துறை அதிகாரிகளும் சூரிய மின் வேலி அமைக்கும் திட்டம் முழுமை பெற தடையாக உள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தனிக்கவனம் செலுத்தி, தடைப்பட்டுள்ள சூரிய மின்வேலி திட்டத்தை விரைந்து முடித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற னர்.