Lifestyle and human interest
10 ஆண்டுகளாக போராடும் 20 கிராம மக்கள்: மூன்று மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம்
அன்னுார்: மூன்று மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்படுவதால், 20 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும், தொழில் முனைவோரும் தவிக்கின்றனர்.
அன்னுாருக்கு வடக்கே, வடக்கலுார், அக்கரை செங்கப்பள்ளி, குப்பனுார் ஆகிய ஊராட்சிகளுக்கு, தற்போது மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள பெத்திக்குட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகிக்கப்படுகிறது. அதிக தொலைவு என்பதாலும், அதிக பகுதிகளை உள்ளடக்கியதாலும் மும்முனை மின்சாரம், மூன்று மணி நேரம் மட்டுமே வினியோகிப்பதால், இந்த ஊராட்சிகளை சேர்ந்த, 20 கிராம மக்கள் பாதிக்கின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் மயில்சாமி கூறியதாவது:
மூன்று ஊராட்சிகளில், வாழை, கரும்பு, பயறு வகைகள் மற்றும் காய்கறி பயிரிடப்படுகின்றன. மும்முனை மின்சாரம், வெறும் மூன்று மணி நேரம் மட்டும் வினியோகிப்பதால், அதிக நேரம் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடிவதில்லை. நிலத்தடி நீர் மட்டம், 1,200 அடிக்கு கீழ் சென்று விட்டது. அதிக நேரம் மின்மோட்டார் இயங்கினால் மட்டுமே பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும். மழையும் இல்லாததால் பயிர்கள் கருகி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ., நீலகிரி எம்.பி., கோவை கலெக்டர், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு என அனைவருக்கும் மனு அளித்து விட்டோம். ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளோம்; எனினும் நடவடிக்கை இல்லை.
எங்கள் ஊராட்சிக்கு மிக அருகில் உள்ள பசூரில் இருந்து மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டால், கூடுதல் நேரம் வழங்க முடியும். மூன்று ஊராட்சிகள் பயன் பெறும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
எண்ணெய் செக்கு உரிமையாளர்கள் சிலர் கூறுகையில், 'மும்முனை மின்சாரம் அதிக நேரம் வராததால், முழுமையாக எண்ணை செக்குகளை இயக்க முடிவதில்லை. வடக்கலுார் மின்வாரிய அலுவலகம் மற்றும் மேட்டுப்பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அன்னுாரில் வடக்கு பகுதியில் குறைந்தது 16 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.