Lifestyle and human interest
கேரள முதல்வர் நடனமாடும் ஏஐ வீடியோவை நீக்கியது மெட்டா நிறுவனம்

திருவனந்தபுரம்: ஏஐ தொழில்நுட்பத்துடன் , கேரள முதல்வர் நடனமாடுவது போன்று வெளியிடப்பட்ட வீடியோவை பேஸ்புக், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கி உள்ளது.
ரஜினி நடிப்பில், அனிருத் இசையமைப்பில் வெளியாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தின் பாடலான 'அல்லே போலல்லோ..' இந்தியா முழுவதும் ஹிட்டானது. இப்பாடலுக்கு, கேரள முதல்வர் சதீசன் நடனமாடுவது போல வெளியான ஏ.ஐ., வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை திரிச்சூரை சேர்ந்த யூடாட் என்ற நிறுவனம் உருவாக்கி வெளியிட்டு இருந்தது.
இதுகுறித்து கோழிக்கோட்டில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற கேரள முதல்வர் சதீசன் கூறியதாவது: ஏ.ஐ., நடன வீடியோவை பார்த்த போது எனக்கே வியப்பாக இருந்தது. நிஜ வாழ்க்கையில் எனக்கு நடனமே ஆட வராது. ஆனால், அந்த வீடியோவில் என்னை மோகன்லால் மற்றும் நடிகர் விஜய்யை விட படுவேகமாகவும், அட்டகாசமாகவும் ஆட வைத்திருக்கிறார்கள். தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமான பணிகளுக்குப் பயன்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிலையில், இந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து மெட்டா நிறுவனம் நீக்கி உள்ளது.இது தொடர்பாக யூடாட் நிறுவனத்தின் உரிமையாளர் அபிஜித் கூறுகையில், புகாரைத் தொடர்ந்து அந்த வீடியோ நீக்கப்பட்டு உள்ளது என்று மெட்டா நிறுவனம் எங்களுக்கு தகவல் அளித்துள்ளது. இந்த வீடியோ நீக்கத்திற்கு எதிராக புகார் அளிக்கும் எண்ணம் ஏதும் இல்லை எனத் தெரிவித்து உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சதீசன் கூறுகையில், இந்த வீடியோவை பார்த்து ரசித்தேன். ஆனால், அதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளன என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.