Politics
தாராபுரம் இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று மின்னணு இயந்திரங்கள் ஒதுக்கீடு
திருப்பூர்: தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவுக்காக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி, கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.
தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு வரும் அக். 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர். தொகுதியில் மொத்தம் 320 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
தேர்தல் நாளில் ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதற்கான கூட்டம், தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். தேர்தல் பொது பார்வையாளர் அம்கோத் ஸ்ரீரங்கநாயக் முன்னிலை வகித்தார். ஓட்டுச்சாவடிகளிலும் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பொருத்துவதற்காக புதிய பேட்டரிகள் வரவழைக்கப்பட்டு, கலெக்டர் அலுவலக வளாக தரைத்தளத்தில் உள்ள தேர்தல் பிரிவு அறையில் வைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 320 ஓட்டுச்சாவடிகள் உள்ள நிலையில், 20 சதவீதம் கூடுதலாக கன்ட்ரோல் யூனிட் மற்றும் பேலட் யூனிட்களும், 30 சதவீதம் கூடுதலாக வி.வி.பேட் இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடக்கும் கூட்டத்தில், தேர்தல் பார்வையாளர் தலைமையில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, தாராபுரம் அரசு கலைக் கல்லுாரியில் பாதுகாப்பாக வைக்கப்படும்.