காஞ்சிபுரத்தில் கலங்கலாக வரும் குடிநீர்
காஞ்சிபுரம், செப். 13– காஞ்சிபுரம் மாநகராட்சி பஞ்சுப்பேட்டை பெரிய தெருவில், ஒரு மாதமாக குழாய் தண்ணீர்

காஞ்சிபுரம் மாநகராட்சி பஞ்சுப்பேட்டை பெரிய தெருவில், ஒரு மாதமாக குழாய் தண்ணீர் கலங்கலாக பழுப்பு நிறத்தில் வருவதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பஞ்சுப்பேட்டை பெரிய தெரு, குறுக்கு சாலைகளில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு 1 மாதமாக வீட்டு குழாய்களில் 20 – 30 நிமிடங்கள் மட்டுமே தண்ணீர் வருகிறது.
அதுவும் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுப்பு நிறத்தில், கலங்கலாக, அசுத்தமாக வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் மளிகைக்கடை வைத்திருக்கும் பொன்னம்மாள் கூறுகையில், ‘‘குழாய் தண்ணீர் சாக்கடை நீர் போல பழுப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் வருகிறது. பாத்திரம் கழுவக்கூட முடியவில்லை,’’ என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகிக்கப்படும் முன், முறையாக குளோரின் கலக்கப்பட்டு துாய்மையான பிறகே அனுப்பப்படுகிறது. இந்த புகார் குறித்து உடனடியாக நேரில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.