Arts, culture, entertainment and media
மருத்துவ காப்பீடு திட்டம் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அரசின் மருத்துவ காப்பீடு அரசாணையில் செலவில்லா மருத்துவத்தை உறுதி செய்ய வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு 1.7.2026 முதல் 30.6.2031 வரையான காலத்திற்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த அரசாணை வெளியிட்டது. ‘மருத்துவ காப்பீடு திட்ட அட்டையிலேயே ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. சிகிச்சை கட்டணத்தை வழங்குவதில் அலட்சியம், அவசர சிகிச்சை பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் 60 சதவீதம் என்பது ஏமாற்றுவேலையாக உள்ளது’ எனக்கூறி செலவில்லா சிகிச்சை திட்டமாக செயல்படுத்த வலியுறுத்தி நேற்று அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மணிவண்ணன் வரவேற்றார். இணைச் செயலாளர்கள் ஜெயராமன், ஆதரமிளகி, தினகரசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பாலமுருகன் கோரிக்கை குறித்து விளக்கினார். மாநில தலைவர் ஜெயச்சந்திரன் நிறைவுரையாற்றினார். மாநில செயலாளர் கிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க செயலாளர் நீதிராஜா, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகி திருவேங்கடராஜ், கருவூல கணக்குத்துறை மூர்த்தி, பொருளாளர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.