Arts, culture, entertainment and media
மாதம் ஒருநாள் குடிநீர் சப்ளை: உத்தமபாளையத்தில் முற்றுகை
உத்தமபாளையம்:உத்தமபாளையத்தில் மாதத்திற்கு ஒரு நாள் குடிநீர் சப்ளை நடைபெறுவதால் தட்டுப்பாட்டால் தவிக்கும் பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. நகரின் விரிவாக்க பகுதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடிநீர் லோயர்கேம்ப்பிலிருந்து பம்பிங் செய்தும், உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் இருந்து பம்பிங் செய்தும் சப்ளை செய்கின்றனர்.
குடிநீர் சப்ளையில் நிறைய குளறுபடிகள் உள்ளன . நகரின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால் நகரின் மையப் பகுதிகளான கோட்டை மேடு, வடக்கு தெரு, தெற்கு தெரு, புதூர் பகுதிகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சப்ளை செய்யவில்லை. குறிப்பாக பெரிய செட்டியார் வீதி, பூக்கடை சந்து, சிங்காரத் தோப்பு வீதி உள்ளிட்ட பல வீதிகள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் செட்டியார் வீதியை சேர்ந்த பெண்கள் கூட்டமாக சென்று பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர். தினமும் வினியோகம் இல்லாவிட்டால் கூட வாரம் ஒரு முறையாவது சப்ளை செய்ய வேண்டும். ஆனால் மாதம் ஒரு முறை என்றால் எப்படி சமாளிக்க முடியும் என்று பெண்கள் கேள்வி எழுப்பினர்.