Sport
மாநில டேபிள் டென்னிஸ் தருண், அனன்யா ‘சாம்பியன்’
சென்னை: சென்னையில் நடந்த மாநில டேபிள் டென்னிஸ் போட்டியில், ஆடவர் பிரிவில் தருண், 21, மகளிர் பிரிவில் அனன்யா, 17, ஆகியோர், ‘சாம்பியன்’ பட்டம் கைப்பற்றி அசத்தினர்.
தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில், 5-வது மாநில தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டி, சென்னை ஐ.சி.எப்., உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. மாநிலம் முழுதும் இருந்து 400- வீரர் – வீராங்கனையர் பங்கேற்றனர்.
இதன் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில், ஆர்.டி.டி.எச்.பி.சி., அணியின் தருண், 11 – -9, 11 – -8, 6 – -11, 11 – -9, 13 – -11 என்ற செட் கணக்கில், எஸ்.ஆர்.எஸ்.ஏ., அணியின் பிரேயேஷை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் சென்னை அச்சீவர்ஸ் அணியின் அனன்யா, 11 – -3, 11 – -13, 11 – -9, 11 – -8, 5 – -11, 11 – -8 என்ற செட் கணக்கில், ஆர்.டி.டி.எச்.பி.சி., அணியின் செலினா தீப்தியை வென்று, கோப்பையை கைப்பற்றினார்.
அதேபோல், 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் அக் ஷய் பூஷன், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ஹன்சினி; 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் அக் ஷய் பூஷன், 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் மெர்சி ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
தவிர 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சஞ்சய் அர்விந்த், பெண்கள் பிரிவில் வர்னிகா; 13 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சுஜேத் பெண்கள் பிரிவில் சஹானா; 11 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் அக் ஷத், பெண்கள் பிரிவில் தியா; 9 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் அத்விக், பெண்கள் பிரிவில் சாரதா ராமகிருஷ்ணன் ஆகியோர், சாம்பியன் பட்டம் வென்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, செட்டிநாடு குழுமத் தலைவர் டாக்டர் முத்தையா ராமசாமி, கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.