Politics
ஜார்க்கண்ட் அமைச்சர் மாரடைப்பில் மரணம்
ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த ஜார்க்கண்ட் உயர் கல்வி அமைச்சர் சுதிவ்யா குமார், 56, மாரடைப்பால் நேற்று காலமானார்.
ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சுதிவ்யா குமார், மாநில உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சராக பதவி வகித்தார். மேலும், சுற்றுலா, விளையாட்டு, இளைஞர் நலன் உள்ளிட்ட துறைகளையும் கவனித்து வந்தார்.
நெஞ்சு வலியால், கிரிகிட் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், நேற்று அதிகாலை 2:30 மணி அளவில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் சுதிவ்யா குமார், அதிகாலை 4:00 மணிக்கு மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு ஸ்வேதா என்ற மனைவியும், இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
கிரிகிட் சட்டசபை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய சுதிவ்யா குமார், 2024ல், நில மோசடி மற்றும் பண மோசடி வழக்கில், முதல்வர் ஹேமந்த் சோரன் கைதான போது, அப்போது ஏற்பட்ட நெருக்கடியை திறம்பட சமாளித்தார்.
கடந்த மாதம் மாநிலத்தில் நடந்த மாணவர் போராட்டத்தின் போதும் அவர் முக்கிய பங்காற்றினார். போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்திய குழுவுக்கு அவர் தலைமை தாங்கினார். அவரது மறைவுக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.