2வது அலுவல் மொழியாக துளுவுக்கு அங்கீகாரம்?: அமைச்சரவை கூட்டத்தில் நாளை ஆலோசனை

பெங்களூரு: கர்நாடகாவின் இரண்டாவது கூடுதல் அலுவல் மொழியாக துளுவுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மங்களூரில் நாளை நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில், கன்னடத்திற்கு அடுத்த படியாக, கடலோர மாவட்ட மக்களின் தாய்மொழியாகவும், பழமையான மொழிகளில் ஒன்றாகவும் துளு மொழி விளங்குகிறது.
கடலோர பகுதிகளான தட்சிண கன்னடா, உடுப்பி, மங்களூரு பகுதிகளில் துளு மொழியை பேசும் மக்கள் அதிகமாக இருக்கின்றனர். இதனால், இப்பகுதி துளு நாடு என அழைக்கப்படுகிறது.
துளு நாட்டில் வசிப்பவர்கள் தங்களுக்கென தனித்துவமான கலாசாரம், தெய்வங்களை வழிபடுகின்றனர்.
இப்படி பல சிறப்பு வாய்ந்த துளுவுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, பல காலமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தில், புத்துார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., அசோக்குமார், 'துளு மொழிக்கு மாநில அரசு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்' என்றார்.
இதற்கு பதிலளித்த கன்னட, கலாசார துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, 'துளு பேசும் மக்களின் கோரிக்கைக்கு மாநில அரசு ஆதரவாக இருக்கிறது. துளு மொழியை, இரண்டாவது கூடுதல் அலுவல் மொழியாக்குவதற்கான சட்டப்பூர்வமான வழிமுறைகள் ஆராயப்படுகிறது' என்றார்.
அமைச்சரின் கருத்துக்கு கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
ஒப்படைப்பு இதையடுத்து, அமைச்சர் சிவராஜ் தங்கடகி, நேற்று வெளியிட்ட அறிக்கை:
காங்கிரஸ் ஆட்சியில் அ மைக்கப்பட்ட டாக்டர் மோகன் ஆல்வா தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, துளு மொழியின் வரலாறு, இலக்கியம், எழுத்து முறை, கலாசாரம் குறித்து விரிவாக ஆய்வு செய்தது. இந்த ஆய்வு குறித்த அறிக்கை, கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வர் சித்தராமையாவிடம் ஒப் படைக்கப்பட்டது.
ஒரு மொழியை கூடுதல் அலுவல் மொழியாக அறிவிக்கும் போது எவ்விதமான சட்ட சிக்கல்களும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மாநில அரசு கவனமாக உள்ளது. இதற்காக, பிற மாநிலங்களில் எவ்வாறு கூடுதல் அலுவல் மொழி அங்கீகாரம் வழங்கப்பட்டது என்பதை ஆராய குழு அமைக்கப்பட்டது.
இக்குழு, கடந்த ஜனவரி மாதம் ஆந்திராவுக்கு சென்று ஆய்வு செய்தது. ஆந்திராவில் இரண்டாவது அலுவல் மொழியாக உருது அறிவிக்கப்பட்ட போது, பின்பற்றப்பட்ட விதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இது குறித்த அறிக்கை கடந்த மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது.
துளு என்பது கடலோர மக்கள் பேசும் மொழி மட்டுமல்ல. இது, கர்நாடகாவின் கலாசாரம், பாரம்பரியத்துடன் தொடர்புடையது.
துளுவின் கலாசாரம், கவுரவத்தை பாதுகாக்க மாநில அரசு உறுதியாக உள்ளது.
இதனால், துளு மொழிக்கு இரண்டாவது கூடுதல் அலுவல் மொழி அந்தஸ்து வழங்குவது குறித்து மாநில அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில், துளு நாட்டின் தலைநகர் என அழைக்கப்படும் மங்களூரில், முதன் முறையாக நாளை அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. இதில், துளுவை அலுவல் மொழியாக அங்கீகரிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.