இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வினியோகம் சவுதியின் ‘அராம்கோ’ நிறுவனம் நிறுத்தியது
ரியாத்: சவுதி அரேபியாவைச் சேர்ந்த, ‘அராம்கோ’ நிறுவனம், வினியோக இடர்பாடுகள் காரணமாக இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு எண்ணெய் வினியோகத்தை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பகுதி இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியா முக்கிய கச்சா எண்ணெய் வழங்குநராக உள்ள நிலையில், வளைகுடா பகுதியில் ஈரான் – அமெரிக்க படைகள் இடையே நடக்கும் மோதல் காரணமாக வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் கிழக்கு – மேற்கு எண்ணெய் குழாயில் நடந்த ட்ரோன் தாக்குதலால் அந்த வழியில் நடக்கும் வினியோகம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. இதனால் மேற்கு கடற்கரை துறைமுகங்களுக்கு கச்சா எண்ணெயை கொண்டு செல்லும் வாய்ப்புகள் குறைந்துள்ளன. ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தி வழியான கச்சா எண்ணெய் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மாற்று நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு, 10,300 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதுடன், டேங்கர் கப்பல்களுக்கான கட்டணமும் அதிகரித்துள்ளது.
மறுபக்கம் நாம் அதிகம் வாங்கும் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான தள்ளுபடியும் குறைந்துள்ளதால், மாற்று கொள்முதலுக்கான செலவு அதிகரிக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம், சவுதி கச்சா எண்ணெய் முழுமையாக சந்தையில் தடைபடவில்லை. ‘அராம்கோ’ நிறுவனம் சில சரக்குகளை நேரடி சந்தையில் வர்த்தகர்களுக்கு தொடர்ந்து விற்பனை செய்து வருவதாகவும், அவற்றில் சில ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியாவை வந்தடைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், வழக்கமான நீண்டகால ஒப்பந்தங்களைப் போன்று இவற்றில் உறுதியான வினியோகமும், சாதகமான விலையும் இருக்காது.
அமெரிக்கா – ஈரான் மோதல் தொடங்கியதில் இருந்து இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சவுதி அரேபியாவின் பங்கு ஒன்பது சதவீதமாக உள்ளது. வினியோக பாதிப்பு நீடித்தால், மாற்று கச்சா எண்ணெயை அதிக செலவில் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு, சுத்திகரிப்பு நிறுவனங்களின் லாபம் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.