Politics
ஓம் பதில்கள்

பூஜையின்போது கற்பூர ஆரத்தி காட்டுவதன் தாத்பர்யம் என்ன?-ரேவதி, திருச்சி.
பூஜையின்போது, இந்துகள் அனைவரும் கற்பூர ஆரத்தி காட்டுவர். இந்த கற்பூரம் காட்டும்போது, புகை வரும். இந்த புகையும், வெளிச்சமும் பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும். இது மனிதர்களின் தீமையை- கெடுதலை அழித்து நல்ல நன்மைகளைத் தரும். எனவே பூஜையின்போது கற்பூர ஆரத்தி கண்டிப்பாக காட்டப்பட வேண்டும்.
பைரவர் வழிபாட்டிற்கு உகந்த நாட்கள் எவை?-கே.எல். பகவதி, சென்னை- 91.
பைரவர், சிவனின் அம்சமாக அவதரித்தவர். பயங்கரத்தையும், கொடுமையான செயல்களையும் அடக்குபவர். எல்லா சிவன் கோவில்களிலும் சனி மூலையில் பைரவர் சன்னிதி அமைந்திருக்கும். இவர் காலத்தின் அதிபதி ஆவார். எனவேதான் ஜாதகத்தில் மிக கடுமையான தசாபுக்திகள் நடக்கும்போது, பைரவருக்கு விளக்கேற்றுமாறு ஜோதிடர்கள் அறிவுறுத்துகிறார்கள். பைரவருக்கு அஷ்டமி திதி, உகந்த நாளாகும்.
பைரவருக்கு விளக்கேற்ற, 27 மிளகை முடிச்சாக கட்டி, அதை ஒரு அகலில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, வேறு ஒரு திரியை அந்த அகல் விளக்கில் வைத்து, தீபமேற்ற வேண்டும். மிளகு முடிச்சில் திபமேற்றக்கூடாது.
அப்புறம், உங்கள் எல்லாருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். உங்களுக்கு தாங்க முடியாத கஷ்டம், துன்பம், துயரம், கண்ணீர் இருந்தால் மட்டுமே பைரவருக்கு விளக்கேற்றுங்கள். முக்கியமாக ஆயுள் கண்டம் தீரபைரவர் வழிபாடே சிறந்தது.
அதை விடுத்து, பக்கத்துவீட்டுக்காரி செழிப்பாக இருக்கிறாளே, அவள் நாசமா போகட்டும் என்றோ, அடுத்த கடையில் நல்ல வியாபாரம் நடக்கிறதே, அவன் வௌங்காமல் போக மாட்டானா என்றோ இப்படி இன்னபிற வயிற்றெரிச்சலோடு பைரவர் முன்னால் நின்றால், பைரவர் செம காண்டாகி, உங்களைத் தூக்கி போட்டு மிதித்து விடுவார் ஜாக்கிரதை. பைரவர் என்பவர் சிவனின் கோப அம்சம். எனவே உங்கள் சேட்டை, சில்லுண்டித்தனம் வேண்டாவே வேண்டாம்.
நீங்கள் நிஜமாகவே கஷ்டப்பட்டு, அவர் முன் நின்று யாசித்தால், நிச்சயமாக உங்கள் எதிரிகள் பஸ்பமாகி விடுவர். இது சத்தியமான உண்மை.
எனவே மகா ஜனங்களே. சிவன் கோவிலுக்கு போனமா, பைரவரை ஒரு கும்பிடு போட்டோமா என வந்துட்டே இருக்கணும். அதுதான் உங்களுக்கு நல்லது. க்ஷங் ஸ்ரீஹழ்ங்ச்ன்ப்; உங்களுக்குச் சொன்னேன்!
சந்தியா காலம் என்பதன் பொருள் என்ன? அப்போது நாம் செய்யவேண்டியது என்ன?-கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
சந்தியா காலம் என்பதில் "சந்தி'' என்பதற்கு இடைப்பட்ட காலம் என்று பொருள். மாலையும் இரவும் கூடும் நேரத்திலுள்ள நேரமே சந்தியா காலம் எனப் படும். ஒரு தசை காலம் முடிந்து, இன்னொரு தசை தொடங்கும் இடைப்பட்ட காலம், ஜோதிடம் தசா சந்தி காலம் எனக் குறிப்பிடும்.
காலை, அதிகாலையில் ஒருவர் முகம் மற்றொருவர்க்கு தெளிவாக தெரியாமல் இருக்கும் காலம் காலை சந்தியாகும். மாலையும், இரவும் சேரும் பாதி இருட்டான, காலம் மாலை சந்தியாகும். பகலில் நடுப்பகலும், காலம் மத்தி சந்தி காலம் எனப்படும்.
இவ்விதம் சந்தியா காலத்தில் பிறந்த குழந்தைகள் நல்ல ஆயுளுடன் இருப்பின், வெகு புகழ் பெற்றவராக விளங்குவர்.
மத்தியான சந்தி காலத்தில் ஸ்ரீராமபிரான் பிறந்தார்.
அரிச்சந்திரன் மத்தியான சந்தி காலத்தில் பிறந்தார்.
இராவணன் சூரிய அஸ்தமன, மாலை சந்தி நேரத்தில் பிறந்தார். ஸ்ரீ கிருஷ்ணர் நடு இரவு சந்தி காலத்தில் பிறந்தார்.
காலை சந்தியா காலம் பிராத சந்தியா என்றும், மாலை சந்தியா காலம் சாயன சந்தியா என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த சந்தியா காலம், இறைவணக்கத்திற்குரியது. அதனால்தான் அந்தணர்கள், இந்த நேரத்தில் சந்தியா ஜெபம் செய்கின்றனர். இது பூஜை, விளக்கேற்றுவது என இதற்கே உரியது. சாதாரண நடைமுறை செயல்கள் செய்யலாகது. அதனால்தான், அந்தி சந்தியில் கர்ப்பிணி பெண்கள், இளவயது பெண்கள் வெளியே அலையக்கூடாது என்றனர். பொதுவாக அந்தி நேரத்தில் உணவருத்தக் கூடாது என்றனர். மேலும் சந்தியா காலங்களில் முக்கிய நிகழ்வுகள் நடத்தக்கூடாது என்றனர். கணவன்- மனைவி தாம்பத்தியம் சந்தி நேரத்தில் கூடவே கூடாது என்றனர்.
பழைய நாட்களில், முஸ்லீம் தர்க்காவில், சாயங்கால நேரங்களில் வாங்கு ஓதும்போது, உடனே எல்லா மத மக்களும், வாங்கு ஓதிட்டாங்க என்று, எல்லா கை வேலையையும் விட்டுவிட்டு, அமைதியாக இருப்பார்கள். இதை நிஜமாக அப்போது நடந்தது. இதில் இரண்டு விஷயங்கள் பொதிந்திந்துள்ளது. ஒன்று பிற மதத்தின் வழிபாட்டை மதிப்பது. இன்னொன்று சந்தியா நேரத்தில் எதையும் செய்யக்கூடாது என்பது. ஆக, சந்தியா காலத்தில் மத வழிபாடு தவிர வேறு எதையும் செய்யக்கூடாது என்பதுதான் சத்தியமான உண்மையாகும்.
நாகதோஷத்தால் ஏற்படும் அல்லல் என்ன?-கவிதா, ஆற்காடு.
இது ஜோதிடம் சார்ந்த கேள்வியாகும். ஒரு ஜாதகத்தில் லக்னத்திற்கு 1, 7 அல்லது 2, 8-ல் ராகு அல்லது கேது இருப்பின் அது நாக தோஷம் எனப்படும் அல்லது ராசிக்கும் இவ்விதம் இருப்பின் அது நாக தோஷ ஜாதகம் ஆகும்.
திருமணத்திற்கு வரன் சேர்க்கும்போது, நாகதோஷமுள்ள வரனுக்கு, நாக தோஷமுள்ள வரனை மட்டுமே சேர்க்கவேண்டும்.முக்கியமாக கவனிக்க வேண்டியது. நாகதோஷம் 1, 7 அல்லது 2, 8 இந்த இடத்தில்தான் இருக்கும்.செவ்வாய் தோஷம் என்பது மானாவாரியாக அமையும். அதற்கு ஆயிரம் விதிவிலக்கும் உண்டு. ஆனால் நாகதோஷம் எனும் ஸர்ப்ப தோஷம், இரண்டு இடங்களில் மட்டுமே முக்கியத்துவம் பெறும். நாகதோஷம் குறிப்பிடும் இடங்களை கவனியுங்கள். 1, 7, 2, 8 இவற்றில் 7 மற்றும் 2-ஆமிடங்கள், அனைவருக்கும் மாரக ஸ்தானமாகும். 8-ஆமிடம் ஆயுள் குறிக்கும் இடமாகும். எனவே நாக தோஷம் சாம்யம் பெற வேண்டும். அதாவது- சமமாக இருக்கவேண்டும். அப்போதுதான் தம்பதிகள் பூர்ணாயுளுடன் வாழமுடியும்.இதில் மற்றொரு உள்ளார்ந்த விஷயம் உண்டு. இந்த ராகு- கேது இருப்பு ஜாதகர்களை எதிர்மறை சிந்தனைகளால் நிரப்பிவிடும். யோசியுங்கள். இரு எதிர்மறை சிந்தனை கொண்டவர்கள் இணையும்போது, எளிதாக காலம் தள்ளிவிடலாம். பாம்பின் கால் பாம்பு அறியும் என்பர்.எனவே நாகதோஷமுள்ள ஜாதகத் துடன், நாகதோஷம் இல்லாத ஜாதகம் சேர்க்கக்கூடாது. சரிதானே!
இறைவனை தொழும்போது, துதி சொல்வது அவசியமா?-ராஜேஷ், செங்கல்பட்டு.
பூஜையின்போது துதி எனும் மந்திர ஸ்லோகம் சொல்கிறோம். மந்திர ஸ்லோகம் சொல்லும்போது, உண்டாகும் அந்த சப்தம், நம்முடைய நாடி நரம்புகளிலும், வெளியிலும் ஏற்படுத்தும் சலனங்கள் நமக்கு மிகுந்த நற்பயன்களையும் மேலான பலன்களையும் தரத்தக்கவை. இதனை மறுபடி, மறுபடியும், மீண்டும் மீண்டும் உச்சரிப்பதால், அந்த மந்திர சப்த விசேஷம் நம்மையும், நம் வீட்டையும் சுற்றி படர்கிறது. அந்த ஸ்துதிகளின் மேன்மை நம்மை காத்து ரட்சிக்கும்.
இன்னொரு காரணம், பூஜையின்போது, நம் முழுக் கவனமும் பூஜையின் தெய்வத்தின்மீதே இருக்கவேண்டும். பூஜை ஆரம்பித்துவிட்டு, அடுப்பில் பாலை வச்சமே, கேஸ் ஆஃப் பண்ணிவிட்டேனா என்றோ, செல்லை சார்ஜில் போட்டோமா இல்லையா என்ற நினைப்பு வரக்கூடாது.
பூஜை என்றால் முழுக் கவனமும் தெய்வத்தின்மீதே இருக்கவேண்டும்.
அதற்குரிய வழிதான் துதி சொல்வது. ஆன்மிக துதியை மறக்காமல் சொல்ல முயலும்போது, கொஞ்ச நேரமாவது லௌகீக வாழ்வை மறக்கலாம் அல்லவா!
எனவே பூஜையின்போது துதி சொல்வது அவசியம்தான்!
பிள்ளையாரை மட்டும் அவரவர் விருப்பப்படி சிருஷ்டித்து வழிபடுவது ஏன்?-தமிழ்ச்செல்வி, இராயபுரம்.
பிள்ளையார் ஏழை எளியவர்களுக்கு உரிய சுவாமி. அவரை மஞ்சள் பொடி. களிமண், சாணி என எவரும் ஒரு பிள்ளையாரை பிடித்து பூஜை செய்யலாம்.
மற்ற தெய்வங்களை, பிரதிஷ்டை பண்ணி, பிராண பிரதிஷ்டை என செய்து, அந்தந்த தெய்வங்களை ஆவிர்ப்பாவம் செய்து, ஜீவ கலையை உண்டாக்க வேண்டும். ஆனால் நம்ம பிள்ளையாருக்கு இதில் எதுவும் தேவையில்லை.
களிமண்ணை பிள்ளையாராக பிடித்து வைத்தாலும். அவர் அதில் வந்து அமர்ந்து அருள்பாலிக்க ஆரம்பித்துவிடுவார். பிள்ளையாருக்கு பெரிய கோவில், பிராகாரம் எல்லாம் தேவையில்லை. ஒரு அரச மரத்தடி, தெரு முக்கு, ஒரு சந்து என பார்த்த இடத்தில் எல்லாம் பிள்ளையார் அமர்ந்திருப்பார்.
பிள்ளையாருக்கு சிறப்பானது சிதறு தேங்காய் போடுவது. இதனை சிறு குழந்தைகள் எடுத்துக்கொள்வர். அடுத்தது தோப்புக்கரணம் போடுவது.
இவ்வாறு தோப்புக்கரணம் இரண்டு காதுகளையும், கைகளை குறுக்காக வைத்து போடும்போது, அப்போது சில நரம்புகளில் சலனம் ஏற்பட்டு நல்ல மாறுதல் உண்டாகிறது. நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ளும்போதும் உடலில் நல்ல மாறுதல்கள் உண்டாகும்.
விநாயகரை வணங்கும்போது ஔவையார் அருளிச் செய்த, விநாயகர் அகவலை கண்டிப்பாக கூறவேண்டும்.
அர்த்தம் தெரியாமல், கொஞ்சம் தப்பாககூட கூறலாம். பிள்ளையார் நாளடைவில் நம்மை சரியாக வாசிக்க செய்துவிடுவார்.
விநாயகர் நம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, உலகம் பூராவும் பரவி நிரவி நிற்கிறார். இத்தனை விசேஷம் எளிய பிள்ளையாரை, அவரவர் விருப்பம்போல் வணங்கலாம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)