Politics
"மக்களுக்கு உபயோகமில்லாத ஒரு சட்டசபையாக நடந்திருக்கிறது" - பிரேமலதா விமர்சனம்

"இது வெறும் ஃபோட்டோ ஷூட் ஆட்சியாக மட்டுமில்லாமல், மக்களுக்குப் பலன் உள்ள ஆட்சியாக இருக்க வேண்டும்" தேமுதிக பொதுச்செயலாளரும் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்தார்.
பேரவைத்தலைவர் முடிந்தவரை நடுநிலையாகத்தான் செயல்படுகிறார். அனைவருக்கும் சமமாகத்தான் வாய்ப்பு வழங்குகிறார். நேற்று திமுகவினரை பேச அனுமதிப்பதாக சொன்ன பிறகு ஏன் அதை மறுத்தார் என்பதை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
சட்டமன்ற பட்ஜெட் கூட்டுத்தொடரில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளரும் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-
”பேரவையில் சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசாவில் கைது செய்யப்பட்டதெல்லாம் பழைய வரலாறு. பழையதைப் பற்றி பேசிப் பேசி முதல்வர் காலத்தைத்தான் வீணடிக்கிறார். பழைய வரலாறு அனைவருக்கும் தெரிந்ததுதான். அதைப்பற்றி பேசுவது, மக்களுக்கு உபயோகமில்லாத ஒரு சட்டசபைதான் நடந்திருக்கிறது.
போக்குவரத்துத் துறையைப் பற்றிப் பேசியிருக்கிறோம். மிகவும் நஷ்டத்தில் ஈடுபடுகின்ற ஒரு துறை போக்குவரத்துத் துறை. அதை மேம்படுத்தும் நோக்கில்தான் ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அதற்கான நடவடிக்கைகள் எதுவும் ஆளுங்கட்சியினர் செய்யவில்லை.
ஆட்டோ தொழிலாளர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக மீட்டர் கட்டணம், ஓலா, உபர் இவை எல்லாம் கட்டணம் உயர்த்தப்படாமல் இருக்கிறது. 2003-ஆம் ஆண்டு ஓய்வூதியத் திட்டம் புதுப்பிக்கப்பட வேண்டும்; அதைப் புதுப்பித்துப் புதிய ஓய்வூதியத் திட்டங்களை அறிவிக்க வேண்டும். அகவிலைப்படித் தொகை காலதாமதம் இன்றி உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
விருத்தாச்சலத்திலிருந்து நேரடியாக ஆன்மீகச் சுற்றுலாக்களுக்குச் செல்வதற்கு விருத்தாச்சலத்திலிருந்து திருச்செந்தூர், பழனிக்கு நேரடிப் பேருந்து வசதி வழங்க வேண்டும். விருத்தாச்சலத்தில் உள்ள பணிமனையில் அவர்களுக்கு அடிப்படை வசதிகூட இல்லாமல் இருக்கிறது. அதை ஏற்படுத்தித் தர வேண்டும். பெண்களுக்கு எப்படி அரசு இலவசப் பேருந்து வசதி தருகிறார்கள் என்பதை அறிவிக்க வேண்டும்.
322 போக்குவரத்துப் பணிமனைகள் இருக்கின்றன. அதில் 200க்கும் மேற்பட்ட பணிமனைகளில் 25 வருடங்களுக்கு முன்பாக எப்படி இருந்ததோ அதேபோல்தான் இன்றும் இருக்கிறது.
அரசுப் பள்ளிகளின் பி.எஸ்.என்.எல். இணைப்பு இல்லாமல் இயங்கி வருகிறது. கிராமப்புறத்தில் இருக்கும் ஏழை, எளிய மக்களின் அறிவு வளரத் திட்டம் தீட்டி வளர்ச்சி தர வேண்டும்.
விருத்தாச்சலத்தில் கிளைச் சிறை விரிவாக்கம் செய்ய வேண்டும். விருத்தாச்சலத்தில் சிப்காட் கொண்டு வர வேண்டும். நெல் சேமிப்புக் கிடங்கு விருத்தாச்சலத்தில் அமைத்துத் தரவேண்டும் என அரசிடம் வலியுறுத்தியிருக்கிறோம்.
சூரியகாந்தி எண்ணெய் தொழிற்சாலை நடந்துகொண்டிருந்தது. இது முற்றிலுமாக இப்பொழுது மூடப்பட்டுள்ளது. அதை நம்பி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை செய்தார்கள். அந்தத் தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட வேண்டும். எல்லாருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும். இதுபோன்ற பல பிரச்சினைகளை அவையில் பேச முற்பட்டோம். அங்கு பேச முடியவில்லை. இங்கு பேசியிருக்கிறோம்.”என்று அவர் தெரிவித்தார்.
நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடர் எப்படி இருந்தது என செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், "இந்தக் கூட்டுத்தொடர் முடிகிறது. அடுத்த கூட்டுத்தொடர் டிசம்பரில் இருக்கும் எனச் சொல்லியிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அதிகபட்ச நேரம் சண்டை போடுவதிலும் மக்களுக்குப் பலன் இல்லாத விஷயத்திலும்தான் சென்றது. அதேபோல் ஆக்கபூர்வமான விஷயங்களும் நடந்தது.
நேற்று முதலமைச்சர் அவருடைய துறையில் பதிலுரை ஆற்றினார். ஆனால், இப்பொழுதுவரை காவல்துறைக்கும் லட்சக்கணக்கான காவலர்களுக்கும் ஏதாவது அறிவிப்பு கொடுத்தாரா என்றால் இல்லை. அவர்கள் புதிதாக ஓய்வூதிய உயர்வு, குடியிருப்பு என எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இதைவிடுத்து பழைய வரலாறு பேசி என்ன பயன் இருக்கிறது. இது ஆரோக்கியமான விஷயமாக நாம் பார்க்கவில்லை.
மக்கள் வரிப்பணத்தில் சட்டசபை நடந்துகொண்டிருக்கிறது. அதனால் மக்கள் பிரச்சினையைத்தான் பேச வேண்டும். இன்று காவல்துறை மானியக் கோரிக்கை. காவல்துறைக்கு முதலமைச்சர் மூலமாக நல்ல அறிவிப்புகளை, திட்டங்களை அறிவிக்க வேண்டும் எனச் சபாநாயகரிடம் முறையிட்டேன்.
மேட்டூருக்குச் சென்று அணையைத் திறந்து வைத்தார். ஆனால் தண்ணீர் கடைமடை வரை சென்றதா என்பதை அவர் பார்க்கவில்லை. சகதிகள், முட்புதர்கள் என அனைத்தும் அங்கு இருக்கிறது. அது மக்களுக்குச் சென்றதா என்பதைக் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்திருக்க வேண்டும். இதையெல்லாம் எங்கு நாங்கள் பேசுவது என்று தெரியவில்லை.
ஒரே நாளில் 6 கொலைகள் நடந்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. போதைக் கலாச்சாரம் தமிழ்நாட்டில் வளர்ந்திருக்கிறது. இது வெறும் ஃபோட்டோ ஷூட் ஆட்சியாக மட்டுமில்லாமல், மக்களுக்குப் பலன் உள்ள ஆட்சியாக இருக்க வேண்டும்." என்றார்.
சபாநாயகரின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, "பேரவைத் தலைவர் நடுநிலையோடுதான் செயல்படுகிறார். உடனடியாக அதைச் சொல்ல முடியாது. எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கிறார். எல்லோரையும் அனுசரிக்கிறார். அதிகபட்சமாக அவரால் முடிந்தவரை வாய்ப்பு அளிக்கிறார். அவர் அதிகமாகப் பேசியது அமருங்கள், அமருங்கள் என்றுதான்.
நேற்று நடந்த விஷயம் பலமுறை அவர் இருக்கையில் அமருங்கள் எனச் சொன்னார். அதைக் கேட்காமல் அவர்கள் இருந்ததால்தான் அறைக் காவலர்களை விட்டு வெளியேற்றி விட்டனர் என்று தெரிவித்தார்.
