தமிழக கோவில்களுக்கு அசாம் யானைகள் அனுமதி வழங்க வனத்துறைக்கு கெடு
சென்னை: 'திருவண்ணாமலை உட்பட நான்கு கோவில்களுக்கு, அசாமில் இருந்து யானைகள் கொண்டு வருவதற்கான அனுமதி வழங்குவது குறித்து, ஒரு வாரத்துக்குள் முடிவெடுக்க வேண்டும்' என, தமிழக வனத்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த சேவா டிரஸ்ட் அமைப்பு சார் பில் தாக்கல் செய்த மனு:
கோவில் கும்பாபிஷேகம், பிரமோற்சவம் உள்ளிட்ட விழாக்களின் போது, யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு அனுமதி அளிப்பதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க, வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.
யானைகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும் வகையிலும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைத்து ஒப்புதல் வழங்கலாம்.
விழாக்களில் பயன்படுத்தப்படும் யானைகளின் தகுதி குறித்து, அரசு கால்நடை மருத்துவரின் சான்றிதழ் பெறுவது; குறைந்தது எட்டு மணி நேரம் யானைகளுக்கு ஓய்வு அளிப்பது உள்ளிட்ட விதிமுறைகளை வகுக்கலாம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தலைமை நீதி பதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், 'மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருவண்ணா மலை அருணாசலேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மடம் மற்றும் மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில், ராமேஸ்வரம் ரா மநாதசுவாமி கோவில் போன்றவற்றுக்கு அசா மில் இருந்து யானைகள் கொண்டு வரப்பட உள்ளன.
'அதற்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்' என, கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வனத்துறை தரப்பில், 'மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு, துர்கா என்ற யானை கொண்டு வர, வனத்துறை ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டது' என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 'திருவிழா காலங்கள் தொடங்கி உள்ளதால், மீதமுள்ள நான்கு கோவில்களுக்கு யானைகளை கொண்டு வருவதற்கு ஒப்புதல் கோரிய விண்ணப்பங்கள் மீது, ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்' என, தமிழக வனத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதுகுறித்து வனத்துறை, அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தி, விசாரணையை வரும் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.