Politics
மக்கள் அழைப்பை ஏற்காத அதிகாரிகள் திருந்த வேண்டும்: அமைச்சர் அறிவுரை
சென்னை:''மக்களின் அழைப்புக்களை ஏற்காமல், அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்கள் உள்ளன. அதிகாரிகள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார்.
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக சமீபத்தில், தலைமை செயலகத்தில், முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
அந்த வரிசையில், திரு.வி.க.நகர், ராயபுரம் மண்டலங்களுக்கான ஆலோசனைக் கூட்டம், ஓட்டேரியில் உள்ள திரு.வி.க.,நகர் மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாதவரம் மண்டலத்திலும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில், திரு.வி.க.நகர் எம்.எல்.ஏ., பல்லவி மற்றும் கவுன்சிலர்கள், மண்டல அலுவலர்கள், பல்வேறு துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். அவர்களுடன் ஆலோசைனை நடத்திய பின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:
மக்கள் பிரதிநிதிகளோ, பொதுமக்களோ அழைத்தால், அதிகாரிகள் தொலைபேசியை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும். அதிகாரிகள் தங்களை உடனே மாற்றிக்கொள்ள வேண்டும்.
உங்கள் பணிகளை மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். அதை உணர்ந்து, பணிகளை குறிப்பிட்ட நாட்களுக்குள், தரமாகவும் தெளிவாகவும் முடிக்க வேண்டும். மக்களின் பிரச்னைகளை தீர்க்க அதிகாரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மழைக்காலங்களில் குடிநீரில் கழிவுநீர் கலக்காத வகையில், தடையின்றி சுத்தமான குடிநீர் வினியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
சேதமடைந்துள்ள சாலைகளில் உடனே, 'பேட்ச் ஒர்க்' எனும் ஓட்டு வேலைகளை முடிக்க வேண்டும் பருவமழை முடியும் வரை, வாரந்தோறும் கள ஆய்வு தொடர்ந்து நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.