கட்டுப்பாட்டை இழந்த ஜீப் குளத்தில் கவிழ்ந்து இருவர் பலி

கருமத்தம்பட்டி: கோவை அருகே கட்டுப்பாட்டை இழந்த ஜீப், குளத்தில் கவிழ்ந்ததில், இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம், 63 வேலம்பாளையத்தை சேர்ந்தவர் பத்மநாபன், 56. குவாரி உரிமையாளர். இவரது நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரியும் 63.வேலம்பாளையத்தை சேர்ந்த சென்னியப்பன், 65 என்பவருடன் தொழில் நிமித்தமாக, கோவை மாவட்டம், செம்மாண்டாம் பாளையம் புதூருக்கு ஜீப்பில் நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளனர். வேலை முடிந்து இரவு, 8:30 மணிக்கு, செம்மாண்டாம் பாளையம் புதூர் குளக்கரை ரோட்டில் சென்றனர்.
சென்னியப்பன் ஜீப்பை ஓட்டியுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக, கட்டுப்பாட்டை இழந்த ஜீப், குளத்துக்குள் கவிழ்ந்தது. இதில், பத்மநாபன் மற்றும் சென்னியப்பன் ஆகிய இருவரும் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவ்வழியே சென்றோரும், அவ்வூர் மக்களும் சேர்ந்து இரு சடலங்களையும் மீட்டனர்.
கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.