புத்துணர்வு முகாம் நடத்தினால் யானைகள் ஊருக்குள் நுழையும் பாதுகாப்பான இடத்தில் நடத்த கோரிக்கை
கோவை: யானைகள் புத்துணர்வு முகாமிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகள், வனப்பகுதியை ஒட்டாத இடத்தில் முகாம் நடத்த வலியுறுத்தி உள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கான புத்துணர்வு முகாம், முதுமலை தெப்பக்காடு, மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி ஆகிய இடங்களில் 2003 முதல் நடத்தப்பட்டு வந்தது.
ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடந்த முகாம் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முகாம் தேதி அறிவிக்கப்படவில்லை. 28 யானைகளுக்கு மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி கிராமத்தில் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள ஊர் பகுதிகளில் முகாம் நடத்த, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் தேக்கம்பட்டியில் முகாம் நடந்தபோது, மருதூர், காரமடை நகர், தாசம்பாளையம், தேவனாபுரம், கெண்டேபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்குள் வன யானைகள் புகுந்து, விவசாய நிலங்களை சேதப்படுத்தியதுடன், உயிரிழப்பும் நேர்ந்தது.
ஐந்து ஆண்டுகளாக முகாம் நடத்தப்படாததால், இப்பகுதிகளில் யானைகள் ஊருக்குள் வருவது குறைந்துள்ளது. ஆகவே, வனப்பகுதி மற்றும் குடியிருப்புகளை ஒட்டாத பாதுகாப்பான இடத்தில் முகாம் நடத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.