Arts, culture, entertainment and media
“மறைந்த சாலமன் பாப்பையா இறுதிச் சடங்கில் அரசு மரியாதை வழங்க வேண்டும்” – திமுக எம்.பி. திருச்சி சிவா

திமுக எம்.பி. திருச்சி சிவா, சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் எளிய குடும்பத்தில் பிறந்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பட்டிமன்ற நடுவராக பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்ற சாலமன் பாப்பையா, சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கும் பட்டிமன்றங்களால் மக்களின் பேரன்பைப் பெற்றார். 2021ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருந்தார்.
எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர், பதிப்பாசிரியர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவராக சாலமன் பாப்பையா திகழ்ந்தார். மதுரை ஞானஒளிவுபுரத்தில் வசித்து வந்த சாலமன் பாப்பையா, வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால், தனது 90-ஆவது வயதில் காலமானார். தமிழ்ப்புலமையால் உலகத் தமிழர்களின் உள்ளம் கவர்ந்த சாலமன் பாப்பையாவின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலமன் பாப்பையாவின் மறைவிற்கு முதலமைச்சர் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ”பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன். தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் பாப்பையா. கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் எங்கள் மீது காட்டும் அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை.
தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கும் மதுரை மக்களுக்கும் உலகெங்கும் வாழும் அவரது இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து திமுக சார்பில், எம்.பி. திருச்சி சிவா, மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி சிவா எம்.பி., “அவர் வழியில் இருந்து தமிழ் மொழியை காத்திடுவதே அவருக்கான இறுதி மரியாதையாக இருக்கும். அவரைப் போலவே எல்லோரிடமும் இனிமையாகவும், கண்ணியமாகவும் பழகிட வேண்டும். சாலமன் பாப்பையாவை விரும்பாதவர்களே கிடையாது. அவருக்கு திமுக சார்பில் இறுதி வணக்கம் செலுத்தினோம்.
முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு சாலமன் பாப்பையாவுக்கு நடக்க வேண்டும். திமுக ஆட்சியில் இருந்தபோது, தமிழறிஞர்களுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என அரசு ரீதியாக சொல்லியிருக்கிறோம். இன்றைய அரசு அதனை செய்ய வேண்டும், செய்யும் எனும் அனைவரின் எதிர்பார்ப்பை நாங்களும் வழிமொழிகிறோம்” எனத் தெரிவித்தார்.
