ஏலகிரி பழங்குடியினர் திட்டத்திற்கு நிதி திரட்டும் ‘புதையல் தேடி’ போட்டி
புதுச்சேரி: புதுச்சேரி ஹெரிடேஜ் ரோட்டரி சங்கம் சார்பில் ‘ஏலகிரி பழங்குடியினர்’ திட்டத்திற்கான நிதி திரட்டும் வகையில் கார் அணிவகுப்பு மற்றும் ‘புதையல் தேடி’ போட்டி நிகழ்ச்சி நடந்தது.
பாண்டி மெரினாவில் நடந்த நிகழ்ச்சியில், சீனியர் எஸ்.பி., கலைவாணன், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்ட கவர்னர் வைத்தியநாதன், ஆனந்தன், பொது செயலாளர் அன்பழகன், இணை கவர்னர் சவுரிராஜன் ஆகியோர் கொடியசைத்து கார் அணிவகுப்பு மற்றும் புதையல் தேடி போட்டியை துவக்கி வைத்தனர்.
போட்டியில், பங்கேற்ற ரோட்டரி சங்க அணிகள் தங்களது கார் மூலம் அரியாங்குப்பம், வில்லியனுார், லாஸ்பேட்டை, கோரிமேடு, நகரப் பகுதிகள் மற்றும் ஆரோவில் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டிருந்த ரகசிய ரோட்டரி குறியீடுகளைத் தேடி கண்டுபிடித்தனர். சுமார் 3 மணி நேரம் நடந்த புதையல் தேடி போட்டியில் 7 குறியீடுகளையும் முதலில் கண்டுபிடித்த முதல் மூன்று அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதில், முதல் பரிசு வென்ற ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி குளோயிங் ஸ்டார் அணிக்கு கொடைக்கானல் டியோ ஹோட்டல் ரிசார்ட்ஸில் தங்குவதற்கான கூப்பனும், 2 மற்றும் 3ம் இடம் பிடித்த ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி நெபுலா அணி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி பீச் டவுன் அணிகளுக்கு ஏற்காடு டியோ ஹோட்டல் ரிசார்ட்ஸில் தங்குவதற்கான கூப்பனும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, போட்டியில் பங்கேற்ற அனைத்து ரோட்டரி சங்க அணிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டன.
இதில், திரட்டப்பட்ட நிதி, ஏலகிரியில் வசிக்கும் மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களின் மருத்துவம், கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பொருளாதார உதவிகள் உள்ளிட்ட பல்வேறு சமூகநலப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது.
ஏற்பாடுகளை புதையல் தேடி திட்டத் தலைவர் மீனா, ஏலகிரி பழங்குடியினர் திட்ட தலைவர் ராமச்சந்திர மூர்த்தி, புதுச்சேரி ஹெரிடேஜ் ரோட்டரி சங்கத் தலைவர் அருள்குமார், செயலாளர் சந்திரசேகரன் மற்றும் சங்க நிர்வாகிகள் முகுந்தன், மனோஜ், கவிப்பிரியா, சீதாபதி, விவேகானந்தன், கண்ணன், மணிகண்டன், சிவக்குமார், ராஜி பாபு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.