Politics
‘எம்எல்ஏக்களின் ராஜினாமா கேலிக் கூத்தானது’ - சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி!

இந்த சூழலில், திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணையில், இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக்கூடாது என நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இதனிடையே, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என திமுக, தவெக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் மக்களின் வரிப்பணத்தில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதாகவும், இந்த செலவுகளை அவர்களுடைய கணக்கில் ஏற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (16-09-26) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘எம்.எல்.ஏக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் ராஜினாமா செய்வது ஜனநாயகக் கேலிக்கூத்து. குறுகிய காலத்தில் ராஜினாமா செய்வது வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல். இதை தடுக்க இதுவரை எந்த வழிமுறையும் இல்லை. இது போன்று ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து தேர்தல் ஆணையம் தான் ஆய்வு செய்ய வேண்டும்’ என்று கூறி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறினர். மேலும், இது போன்ற வழக்குகள் தலைமை நீதிபதி முன்பு இருப்பதால் அந்த வழக்கோடு சேர்த்து இதையும் விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)