Politics
“மனிதாபிமானமே இல்லாதவர் ஜோசப் விஜய்... வழக்குப் பதிய முன்னாள் முதல்வர் ஸ்டாலினிடம் சொன்னேன்” – ரகுபதி

"கரூர் சம்பவத்தின் போது விஜய் மீது வழக்குப் பதிய சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் நானும் தான் தெரிவித்தேன்." என முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
கரூர் சம்பவம் குறித்து மனிதாபிமான அடிப்படையில் முதலமைச்சர் விஜய் மீது வழக்கு தொடர வேண்டாம் என முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார் என முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “கரூர் சம்பவத்தின் போது விஜய் மீது வழக்குப் பதிய சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் நானும் தான் தெரிவித்தேன்.
அவர்தான் முதல் குற்றவாளி அவர் மீதுதான் வழக்குப்பதிய வேண்டும் என்று தெரிவித்தோம். ஆனால் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனிதாபிமான அடிப்படையில் அவர் ஒரு நடிகர் அதனால் அவர் மீது வழக்குப்பதிந்து சிறையில் எல்லாம் வைக்க வேண்டாம் என்று தெரிவித்து அவர் மீது வழக்கு பதிய வேண்டாம் என்று தெரிவித்தார்.
அப்போதைய முதலமைச்சர் மனிதாபிமானம் உள்ளவர். ஆனால் தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் மனிதாபிமானமே இல்லாதவர். தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியை கல்லாப்பெட்டி கூட்டணி என்று விஜய் விமர்சித்தார்.
ஆனால் தற்போது முதலமைச்சரான பிறகு எங்கள் கூட்டணியில் உள்ளவர்களை சேர்த்துக்கொண்டு கல்லாப்பெட்டியை அவர்தான் வைத்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
