கார் - ஜீப் மோதி விபத்துதந்தை, தாய், மகன் பலி

நாமக்கல்: நாமக்கல் அருகே, நேற்று அதிகாலை, கார் மீது ஜீப் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை செல்வராஜ், 60, தாய் காந்திமதி, 55, மகன் கார்த்திக்குமார், 35, ஆகியோர் உயிரிழந்தனர்.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி அடுத்த மோளையாண்டிப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ், தேங்காய் நாரில் கயிறு திரிக்கும் தொழில் செய்து வந்தார். அவரது மனைவி காந்திமதி. மகன் கார்த்திக்குமார்.
இவர்கள், கர்நாடக மா நிலம், பெங்களூரில் உள்ள ஈஜிபுரா, விவேக் நகரில் வசித்தனர். உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, மூவரும், 'டொயோட்டா கிளான்சா' காரில், பெங்களூரில் இருந்து, நேற்று அதிகாலை, 12:30 மணிக்கு புறப்பட்டனர். காரை கார்த்திக்குமார் ஓட்டினார்.
அதேபோல், கர்நாடக மாநிலம், பெங்களூரு, ராம் நகரை சேர்ந்த கிருஷ்ண கவுடா, 19, யதுநந்தன், 19, சிவகுமார், 32, அவரது மனைவி கவுதமி, 30, ஆகியோர், திருச்செந்துார் கோவிலுக்கு சென்றுவிட்டு, 'மஹிந்திரா தார்' ஜீப்பில் பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்தனர். ஜீப்பை, கிருஷ்ண கவுடா ஓட்டியுள்ளார்.
இவர்கள் ஜீப், நாமக்கல் அருகே, கரூர் - சேலம் புறவழிச்சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து, சாலை மையத்தடுப்பை தாண்டி, எதிர்திசையில், கரூர் நோக்கி வந்த கார்த்திக்குமார் கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில், கார், ஜீப்பின் முன் பகுதி நொறுங்கியது. இந்த கோர விபத்தில், செல்வராஜ், காந்திமதி, கார்த்திக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஜீப்பில் பயணித்த நால்வரும் லேசான காயத்துடன் தப்பினர். நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். கார்த்திக்குமாரின் மனைவி காவ்யாஸ்ரீ, 34, தற்போது ஏழு மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.