சுந்தராபுரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய எல்.இ.டி. ஸ்கிரீன் தியேட்டர்கள் துவக்கம்

சுந்தராபுரம்: கியூப் சினிமாவுடன் இணைந்து இந்தியாவின் மிகப்பெரிய தியேட்டர் ஸ்கிரீனை கோவையில் அறிமுகம் செய்திருக்கிறது கற்பகம் தியேட்டர் குழுமம்.
ஆனால், இது காந்திபுரத்தில் இல்லை. சுந்தராபுரத்தில் பொள்ளாச்சி ரோடில் அமைந்துள்ளது கற்பகம் கிராண்ட்பிளக்ஸ். இதில் 5 தியேட்டர்கள் உள்ளன. அவற்றில் இரண்டு மிக மிக விசேஷமானவை, கோவைக்கு பெருமை சேர்ப்பவை.
எபிக் லக்சான், எபிக் லேசர் என்ற இரண்டு முன்னோடி தொழில்நுட்ப திரைகள் இவற்றில் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் முதல் எபிக் லக்ஸ்ஆன் திரை அரங்கம் இது. இந்தியாவின் மிகப்பெரிய எல்.இ.டி. திரையும் இதுவே. 63 அடி உயரம், 63 அடி அகலம்.
இந்த திரையில் 4கே ஹை டைனமிக் ரேஞ்ச் அல்லது எச்டிஆர் தொழில்நுட்பம் பயன்படுத்துவதால், காட்சிகளும் கலர்களும் அவ்வளவு தத்ரூபமாக வெளிப்படும். ஒளிபரப்பை முதலில் உள்வாங்கி திரைக்கு அனுப்பும் வழக்கமான டெக்னாலஜிக்கு பதிலாக, இது நேரடியாக எல்.இ.டி. திரைக்கு காட்சிகளை கொண்டுவருகிறது.
எபிக் லேசர் திரை பொருத்திய மற்றொரு அரங்கில் பார்க்கோ 4கே ஆர்.ஜி.பி. லேசர் புரொஜெக்சன் டெக்னாலஜி பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் ஆழமான கருமை, அதிக கான்ட்ராஸ்ட் மற்றும் சீரான படத்தரத்தை ரசிக்கலாம்.
திரையின் வழியே ஒலி ஊடுருவும் வகையில் வடிவமைத்து உள்ளதால், திரைக்கு பின்னால் இருக்கும் ஸ்பீக்கர்களில் இருந்தே ஆழ்ந்த துல்லியமான ஒலி அலைகள் அரங்கம் முழுவதும் பரவும்.
இரு அரங்குகளிலும் 64-சேனல் டால்பி அட்மாஸுடன் கூடிய மேக் ஆடியோ அமைப்பு பொருத்தி, வேறெங்கும் இதுவரை உணராத ஒலி அனுபவத்தை பெற முடியும். கவனத்தை சிதற வைக்கும் பல வண்ணங்களுக்கு பதிலாக பிரதிபலிப்புக்கு இடம் தராத கருப்பு இன்டீரியர் அமைத்துள்ளனர்.
கியூப் சினிமா தலைமை செயல் அலுவலர் ஹர்ஷ் ரோஹத்கி, ‘‘இந்தியாவில் வெகு சிலருக்கே வாய்த்த அதிநவீன சினிமா அனுபவத்தை கோவை மக்களுக்கு வழங்குகிறோம்,’’ என்றார்.
கிராண்ட்பிளக்சின் திறப்பு விழாவில் கற்பகம் குழும நிர்வாக இயக்குநர் சிவபிரகாசம் பங்கேற்றார். பொதுமக்களுக்கு விரைவில் திறக்கப்படும் என தெரிவித்தார்.
இங்குள்ள மற்ற அரங்குகளில் கட்டணம் 200 ரூபாயாக இருக்கும். எபிக் லக்சான், எபிக் லேசர் திரைகள் கொண்ட அரங்குகளுக்கு கூடுதலாக இருக்கும். இன்னும் அறிவிக்கவில்லை. சீட் வடிவமைப்பில் இருந்து எல்லா வசதிகளுமே உயர்ந்த தரத்தில் ஏற்படுத்தி உள்ளனர்.