Politics
“திமுக எம்.பி ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்ட ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏக்கள்” - அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு

திருவண்ணாமலையில் கட்சி நிகழ்வு ஒன்றில் பேசிய வாணியம்பாடி ஐ.யூ.எம்.எல். எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா, சட்டமன்றத் தேர்தல் முடிந்தப் பிறகு கோடி கோடியாக பணம் கொடுத்து அமைச்சர் பதவி தருவதாகவும், லெட்டர் பேடை தயாரித்து பணத்தோடு பேரம் பேசியதாகவும் குற்றம் சாட்டினார். எந்த கட்சியையும் குறிப்பிடாத அவர், தவெகவினர் தான் குதிரை பேரம் நடத்தி பணம் கொடுக்க முயன்றுள்ளனர் என்று கூறியதாக செய்தி வெளியானது.
இது பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, ஐ.யூ.எம்.எல் கட்சி எம்.எல்.ஏ தவெகவை சொல்லவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாலர் கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர் விளக்கம் அளித்தார். மேலும் அவர், நிலையான ஆட்சி யார் அமைப்பது என்ற கால தாமதத்தின் காரணமாக பல கட்சிகளிலும் ஆட்சி அமைப்பதற்கு முயற்சி செய்ததாகவும், அதன் காரணமாக குதிரை பேரம் நடத்தியதாகத் தான் எம்.எல்.ஏ பேசியதாக அவர் விளக்கம் அளித்தார்.
இருப்பினும், நேற்று (07-09-26) சட்டமன்றக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக பெட்டி பெட்டியாக பணம் கொடுத்து அமைச்சர் பதவி தர தவெக குதிரை பேரம் நடத்தியதாக ஐயூஎம்எல் எம்.எல்.ஏ பேசினார் என்று செய்தியாளர்களிடம் வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இதையடுத்து சட்டமன்றத்தில் பேசிய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான், “முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்து விடக்கூடாது என்ற காரணத்தால் 7ஆம் தேதி திமுக தலைமை ஒரு முடிவை எடுத்து எங்களிடம் சொன்னது. 8ஆம் தேதி முடிவை மாற்றி இன்னொரு யோசனையை சொன்னது. முஸ்லீம் லீக் அதை ஏற்க மறுத்ததது. சில விஷயங்களை வெளிப்படையாக சொல்ல முடியாது. 8ஆம் தேதி இரவு 10 மணிக்குப் பிறகு இந்தியன் முஸ்லீம் லீக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களை ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்தது யார்? மிரட்டியது யார்? எங்களுக்கு காவலுக்கு போட்டது யார்? என்பதை உடைத்து சொல்ல வேண்டிய அவசியம் வந்துவிடும்” என மறைமுகமாக திமுகவை குற்றம் சாட்டி எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “எங்களுக்கு வெற்றி கிடைத்தவுடன் மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்கி காங்கிரஸ் கட்சி தனக்கான ஆதரவை கொடுத்தது. மதசார்பற்ற கொள்கைகளின் உறுதியாக எங்களுடைய தலைவர் ஆட்சி அமைக்க வேண்டும் என்கின்ற கருத்துடன் கேரளா ஐயூஎம்எல் தலைவர்களுடன் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக நாங்கள் பேசினோம். அதன் பிறகு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முதுப்பெரும் தலைவராக இருக்கக்கூடிய கட்சி தலைவருடன் நாங்கள் பேசினோம். அதன் பிறகு விசிக, கம்யூனிஸ்ட் தலைவர்கள் அகில இந்திய தலைவர்களுடனும் பேசினோம்.
எந்தவித சட்டமன்ற உறுப்பினர்களிடம் தனிப்பட்ட முறையில் தமிழக வெற்றி கழகத்தினுடைய பொதுச் செயலாளர்களோ நாங்களோ எப்பொழுதும் பேசவில்லை. ஜனநாயகப்படி மக்கள் தீர்ப்பளித்ததை தலைவணங்கி காங்கிரஸும் ஐ.யூ.எம்.எல்வும் விசிகவும் கம்யூனிஸ்ட் தோழர்களும் அனைத்து தோழர்களும் ஜனநாயக பார்வையுடன் இந்த ஆட்சியை அமைத்திருத்திருக்கிறார்கள். ஐயூஎம்.எல் அமைச்சர் சொன்னதை போல், தனியார் ஹோட்டலில் அவர்களை யார் தங்க வைத்தார்கள்? அந்த ஹோட்டல் ஓனர் திமுகவுடைய எம்.பி ஜகத்ரட்சகன் தான். அப்போது அவர்களை அங்கே தங்க வைத்தது யார் என்பதை விரைவில் விசாரணை நடத்த வேண்டும். அதன் பின்னர் யார் குதிரை பேரத்தில் ஈடுபட்டது என்று தெரியும். திமுக தான் குதிரை பேரம் நடத்தியது” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)