மாவட்டத்தில் லோக் அதாலத்: 2,232 வழக்குகளுக்கு தீர்வு
திண்டுக்கல்:மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,232 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காணும் வகையில் தேசிய, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி லோக் அதாலத் நடக்கிறது. இதில் வழக்கில் தொடர்புடைய இருதரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும்.
தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் நேற்று லோக் அதாலத் நடந்தது. திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பழநி, வேடசந்துார், ஒட்டன்சத்திரம் உட்பட மாவட்டம் முழுவதும் 13 நீதிமன்றங்களில் லோக் அதாலத் நடந்தது. திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடந்த லோக் அதாலத்தில் நிலுவையில் இருந்த வங்கி வாராக்கடன் வழக்குகள், வாகன விபத்து நஷ்ட ஈடு கோரும் வழக்குகள் உட்பட மொத்தம் 3,392 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
இதில் மொத்தம் 2,232 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ.18 கோடியே 44 லட்சத்து 63 ஆயிரத்து 513 வழங்கப்பட்டது.
லோக் அதாலத் மூலம் தீர்வு காணப்பட்ட மனுதாரர் குடும்பத்தினருக்கு ரூ.57 லட்சம் இழப்பீட்டு தொகைக்கான காசோலையை முதன்மை மாவட்ட நீதிபதி வழங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் இன்பகார்த்திக், நீதிபதிகள் பத்மா, கணேசன், சொர்ணம் ராஜகோபாலன், சோமசுந்தரம், கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.