Crime, law and justice
"தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபட்டோர் மீது விரைந்து நடவடிக்கை" - திருமாவளவன் கோரிக்கை
காவல்துறையினரில் தலித் விரோத போக்கையும், கரிக்குப்பம் மற்றும் காரைக்குறிச்சி ஆகிய இரு இடங்களிலும் தலித்துகளுக்கு எதிராக நடந்துகொண்ட சாதியவாதக் கும்பலின் போக்கையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. | thirumavalavan demand to tamilnadu government regards violence against dalits
தமிழ்நாடு அரசுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் கோரிக்கை.
"சிதம்பரம் காரிக்குப்பம், அரியலூர் காரைக்குறிச்சி பகுதிகளில் சாதிவெறியர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் தலித்துகள் மீது காவல்துறையினர் எதிர்வழக்குப் பதிவு செய்துள்ளனர்" என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், "சிதம்பரம், பரங்கிப்பேட்டை அருகேயுள்ள கரிக்குப்பம் கிராமத்தில் நடந்த சாதிய வன்கொடுமையில் தொடர்புடையவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி தலித் மக்கள் கடலூரிலிருந்து பிள்ளையார் சிலை ஒன்றை டிராக்டரில் வைத்து கரிக்குப்பத்திற்குக் கொண்டு செல்லும்போது 'எங்கள் வீதி வழியாக வரக்கூடாது' என எதிர்ப்புத் தெரிவித்து சாதிவெறியர்கள் வம்பிழுத்து அவர்களைத் தாக்குவதற்கு முனைந்துள்ளனர்.
காவல்துறையினரும் சாதி ஆதிக்க சக்திகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் தனியார் நிறுவனத்தையொட்டியுள்ள மாற்றுப் பாதையில் செல்லும்படி கூறியுள்ளனர். சாதியவாதிகளோ காவல்துறையினரின் முன்னிலையிலேயே தலித் மக்களை இழிவாகப் பேசியுள்ளனர். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. ஆனால், வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
அடுத்த நாள் அதே வழியில் பள்ளிக்குச் சென்ற தலித் மாணவர்களை செருப்பை எடுத்து தலையில் வைத்துக் கொண்டு செல்லும்படி அச்சுறுத்தி சாதியைச் சொல்லி இழிவுப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரினை அடுத்து வழக்குப் பதிவாகியுள்ளது. ஆனால், ஒருவரையும் இதுவரை கைது செய்யவில்லை. சாதிவெறியர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் வழக்கம்போல தலித்துகள் மீதும் எதிர்வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதேவேளையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காரைக்குறிச்சியில் விசிக விளம்பர பதாகையைச் சேதப்படுத்திய சாதியவாத கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல், அதே பகுதியில் முளைப்பாரி எடுத்துச் சென்ற தலித் இளைஞர்கள் மீது பொய் வழக்குப் புனைந்துள்ளனர். பள்ளிச் சிறுவர்கள் சிலரைக் கைது செய்துள்ளனர்.
அந்தப் பதாகை சேதப்படுத்தப்பட்ட இடத்தில் தலித் இளைஞர்கள் 'திருமாவளவன் வாழ்க' என்று முழக்கமிட்டுள்ளனர். ஆனால், 'மறைந்த பாமக தலைவர் ஒருவரை ஒழிக' என்று தலித் சிறுவர்கள் முழக்கமிட்டதாகப் புகார் ஒன்றைப் பெற்று வழக்குப் பதிவு செய்திருப்பதோடு கைது நடவடிக்கையிலும் தீவிரம் காட்டியுள்ளது.
காவல்துறையினரில் தலித் விரோத போக்கையும், கரிக்குப்பம் மற்றும் காரைக்குறிச்சி ஆகிய இரு இடங்களிலும் தலித்துகளுக்கு எதிராக நடந்துகொண்ட சாதியவாதக் கும்பலின் போக்கையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
சாதிய வன்கொடுமைகளில் ஈடுபட்டோர் அனைவரையும் உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
