Politics
'தன்னலமற்ற அர்ப்பணிப்பு மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கட்டும்'-முதல்வர் விஜய் வாழ்த்து

கல்வி என்பது வெறும் ஏட்டறிவு மட்டுமல்ல, அது ஒரு மனிதனின் ஒழுக்கத்தையும், எதிர்காலத்தையும் செதுக்கும் உன்னதக் கலை. அத்தகைய உன்னதமான கல்வியை நமக்கு வழங்கும் ஆசிரியர்களைப் போற்றும் நன்னாளாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தியா முழுவதும் 'ஆசிரியர் தினம்' மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தலைவர்களும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் விஜய் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அதில், 'இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!
மாணவர்களின் மனங்களில் அறிவொளி ஏற்றி, ஒழுக்கம், மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் சமூகப் பொறுப்பு உள்ளிட்ட உயரிய நற்பண்புகளை விதைத்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, திறமைகளுக்கு வழிகாட்டி, எதிர்கால வாழ்விற்கான அடித்தளத்தை அமைத்துத் தருவதோடு, நாட்டின் வளர்ச்சியோடு ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தையும் கட்டமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டுவரும் ஆசிரியப் பெருமக்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்!
ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், சிறந்த வழிகாட்டுதலும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும்' என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)