Politics
மணிப்பூர் இசைக்கலைஞர் கொலையை அரசியலாக்குவதா? ராகுலுக்கு பாஜ கண்டனம்

புதுடில்லி: மணிப்பூர் இசைக்கலைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தை ராகுல் அரசியலாக்குவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சித்துள்ளார்.
தலைநகர் டில்லி அருகே கிலோகரி கிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மணிப்பூர் இசைக் கலைஞர் விக்ரம் சிங் (54) என்பவர், அவரது வீட்டுக்கு எதிரே அடித்துக் கொல்லப்பட்டார். தனது வீட்டருகே மது அருந்தியர்களை கண்டித்த போது, நடந்த தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.
,இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ராகுல், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான இதுபோன்ற செயல்களை தடுக்க உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், டில்லி போலீசாரும் என்ன செய்து கொண்டிருந்தனர் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந் நிலையில், ராகுலின் கருத்தை விமர்சித்துள்ள அமைச்சர் கிரஷ் ரிஜிஜூ, இதை அரசியலாக்கக்கூடாது என்றார். அவர் மேலும் கூறி உள்ளதாவது;
இந்த விவகாரத்தில் பாஜவை (ராகுலுக்கு சுட்டிக்காட்டுகிறார்) இழுத்துவிடக்கூடாது. இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. அவர் (ராகுல்) ஏன் பாஜவை இழுக்கிறார் என்று கேள்வி கேட்டுக் கொள்கிறேன். ஒரு சம்பவம் நிகழும் போது உடனடி நடவடிக்கையில் அதிக கவனம் எடுக்க வேண்டும். இது அரசியல் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல.
எந்த ஒரு குற்ற நடவடிக்கை நடந்தாலும் டில்லி போலீசார் தொடர்பில் இருந்து வருகின்றனர். நிலைமை முன்பு போல் இல்லை, விரைந்து செயல்பட்டு வருகிறோம். 8 அல்லது 9 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விடும்.
இவ்வாறு அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார்.