Politics
சத்துணவு சாம்பாரில் சாணி பவுடர்... 51 மாணவர்கள் உயிர் தப்பியது எப்படி?

கொலை செய்யும் நோக்கத்துடன் உணவில் விஷம் கலக்கச் செய்ததாக ஆறுமுகத்தின் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு சமைக்கும் பணியிலிருந்து மனைவியை நீக்கியதால் ஆத்திரமடைந்த கணவர், 8-ம் வகுப்பு மாணவியைப் பயன்படுத்தி சாம்பாரில் சாணி பவுடரைக் கலக்கச் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்துக்கு அருகே ராமபைலூரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. 51 மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளியில் காலைச் சிற்றுண்டி, மதிய சத்துணவு வழங்கப்படுகிறது. உணவின் தரத்தை அறிய ஆசிரியர்கள் சுவைத்துப் பார்ப்பது வழக்கம். ஆகஸ்ட் 31-ம் தேதி சாம்பாரைச் சுவைத்துப் பார்த்த ஆசிரியை ரேவதியின் கையில் மஞ்சள் கறை ஏற்பட்டதுடன், வயிற்று உபாதையும் ஏற்பட்டிருக்கிறது. சாம்பாரில் பயன்படுத்தப்பட்ட மஞ்சள்தூள்தான் காரணமாக இருக்குமோ என்று சந்தேகித்த ஆசிரியர்கள், அதைச் சோதித்திருக்கிறார்கள். ஆனால், மஞ்சள் தூளில் எந்தப் பிரச்னையும் இல்லை.
இதற்கிடையே, மாணவி ஒருவரின் கையிலும் இதே போன்ற மஞ்சள் கறை இருப்பது தெரிய வந்திருக்கிறது. ‘சாணி பவுடரைப் பயன்படுத்தி வீட்டை மெழுகியதால் கறை ஏற்பட்டது’ என அந்த மாணவி கூறியிருக்கிறார். ஆனால், ஆசிரியர்களுக்குச் சந்தேகம் தீரவில்லை. மாணவியின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து விசாரித்தபோது, வீட்டில் சாணி பவுடர் பயன்படுத்துவதில்லை என்று அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். தொடர்ந்து நடந்த விசாரணையில், அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
சத்தியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் வைரம், “ஆலம்மாள் என்பவர் அந்தப் பள்ளியில் தற்காலிகச் சமையலராகப் பணியாற்றியிருக்கிறார். சுகாதாரமான முறையில் உணவு தயாரிப்பதில்லை என்ற காரணத்தால், ஆசிரியர்களின் பரிந்துரையின் பேரில் சில நாள்களுக்கு முன்பு அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஆலம்மாளின் கணவர் ஆறுமுகம், குறிப்பிட்ட மாணவியை மிரட்டி சாம்பாரில் சாணி பவுடர் கலக்கச் செய்திருக்கிறார். நல்லவேளையாக ஆசிரியர்கள் தரப் பரிசோதனை செய்யும்போது சாணி பவுடர் கலக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
கொலை செய்யும் நோக்கத்துடன் உணவில் விஷம் கலக்கச் செய்ததாக ஆறுமுகத்தின் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ள அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. சாணி பவுடரை விற்பனை செய்த கடைக்காரரிடமும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. பள்ளி மாணவி கடுமையாக எச்சரிக்கப்பட்டிருக்கிறார்” என்றார்.
நல்வாய்ப்பாக, சாம்பாரில் சாணி பவுடர் கலந்த விஷமச் செயல், 51 மாணவர்களின் உயிரைக் காவு வாங்கும் விபரீதமாக மாறாமல் தடுக்கப்பட்டிருக்கிறது!
