Politics
தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய புள்ளி... ஸ்வப்னா சுரேஷ் மூன்றாவது திருமணம்! - மணமகன் யார் தெரியுமா?

பினராயி விஜயன் முதல்வராக இருந்த போது 2020 ஆம் ஆண்டு கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தி வந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளா அரசியலில் புயலைக் கிளப்பிய தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய முகமாக அறியப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மூன்றாவது திருமணம் செய்திருக்கிறார்.
பினராயி விஜயன் முதல்வராக இருந்த போது 2020 ஆம் ஆண்டு கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தி வந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளா அரசியலில் பெரும் சூறாவளியை உருவாக்கிய இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர் ஸ்வப்னா சுரேஷ். முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நெருக்கமாக இருந்த கேரள மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் என்பவருடன் ஸ்வப்னா சுரேஷ் நெருக்கமாக பழகி வந்தார்.
இந்த பழக்கத்தை ஸ்வப்னா சுரேஷ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பிய இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து ஜாமீனில் வெளி வந்த ஸ்வப்னா சுரேஷ் தற்போது திருமணம் செய்திருக்கிறார். ஸ்வப்னா சுரேஷ் திருமணம் செய்துள்ள மணமகன் தங்கம் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவரான பி.எஸ். சரித் என்பவர்தான். திருமணம் நடைபெற்ற தகவலை ஸ்வப்னாவே சமூக வலைதளத்தில் அறிவித்திருக்கிறார்.
ஸ்வப்னா சுரேஷ் தனது சமூக வலைதளப் பதிவில், “நாங்கள் சேர்ந்து வாழ்வதற்காக மட்டும் திருமணத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை. எங்கள் குழந்தைகள் உண்மை, மரியாதை மற்றும் நன்னெறிகளைக் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நல்ல சூழலை உருவாக்கவும், ஒன்றாக ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். நான் மகிழ்ச்சியாக இறக்கும் வரை இந்தத் தாலிக்கு என்னுடன் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.
ஊடக தகவலின்படி மணமக்களின் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டனர். திருவனந்தபுரம், தைக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட ஸ்வப்னாவும், திருவள்ளத்தை பூர்வீகமாகக் கொண்ட சரித்தும் சில காலமாக கொச்சியில் ஒன்றாக வசித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்துகொண்டனர். இது ஸ்வப்னாவின் மூன்றாவது திருமணமும், சரித்தின் இரண்டாவது திருமணமும் ஆகும்.
