Religion
திருத்தணி பாப்பாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
திருத்தணி செப். 18– திருத்தணி பாப்பாத்தியம்மன் கோவிலில், நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள்
திருத்தணி பாப்பாத்தியம்மன் கோவிலில், நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
திருத்தணி நகாரட்சி, காந்தி சாலை இரண்டாவது தெருவில், பழமைவாய்ந்த பாப்பாத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து, நேற்று முன்தினம் கணபதி, நவகிரக ஹோமங்களுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
இதற்காக, கோவில் வளாகத்தில் மூன்று யாக சாலைகள், 108 கலசங்களை வைத்து, லட்சுமி பூஜை, கோ பூஜை மற்றும் கும்ப அலங்காரம், யாகசாலை பூஜை ஆகியவற்றை சிவாச்சாரியார்கள் செய்தனர்.
நேற்று காலை 8:30 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டு, கோவில் விமான கோபுரத்தில் புனித நீர் ஊற்றி மகா அபிஷேகம் நடந்தது. பின், தீபாராதனை நடந்த பின், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
மேலும், கோவிலில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட துர்க்கை அம்மன், விநாயகர், பாலமுருகன் மற்றும் நவகிரக சிலைகளுக்கும் கலச நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் மற்றும் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் மகா தீபாரதனையும் நடந்தது. இதில், திருத்தணி முன்னாள் தி.மு.க., – எம்.எல்.ஏ., சந்திரன் உட்பட, 1,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, காந்தி சாலை இரண்டாவது தெரு பொதுமக்கள் செய்திருந்தனர்.