Politics
வி.சி.க.,வுக்கு அமைச்சர் பதவி கிடைத்ததால் திருமாவளவன் நிலைப்பாட்டில் மாற்றம்: தே.மு.தி.க., பிரேமலதா விமர்சனம்

சென்னை: ''தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் ராஜா உள்ளிட்டோர் மீதான வழக்குகள் சரி தான்; அவர்கள் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியது கண்டிக்கத்தக்கது,'' என, அக்கட்சியுடன் கூட்டணியில் உள்ள தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா தெரிவித்தார்.
சென்னை கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நேற்று, அக்கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பின் பிரேமலதா அளித்த பேட்டி:
தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை அதிகரித்துள்ளது. சென்னை - பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைக்கக் கூடாது என, மீனவர்கள் போராடி வருகின்றனர். எந்த திட்டமாக இருந்தாலும், மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் தான் இருக்க வேண்டும்.
தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,விற்கு 10 தொகுதிகள் வழங்கியதை, வி.சி.க., தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
இதே திருமாவளவன் தான், 2016ல் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்தை ஏற்றுக் கொண்டார்.
இப்போது எங்களை விமர்சிப்பது ஏன்? வி.சி.க.,வுக்கு அமைச்சர் பதவி கிடைத்ததால் நிலைப்பாடு மாறியதா? இது காழ்ப்புணர்ச்சியா அல்லது பயமா?
பெண்களை இழிவு படுத்தும் வகையில், முன்னாள் அமைச்சர் ராஜா உள்ளிட்டோர் பேசியது கண்டிக்கத்தக்கது; அவர்கள் மீதான வழக்கு சரியே. த.வெ.க.,வினரும் ஒன்றும் யோக்கியர்கள் இல்லை; அவர்களும் இழிவாக தான் பேசி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.