Politics
“அமைச்சர் பதவிக்காக கூட்டணி மாறிய விசிக… கம்யூ. நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது தானே?” – பிரேமலதா விஜயகாந்த்
அமைச்சர் பதவிக்காக விசிக கூட்டணி மாறியதாக பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். திருமாவளவன் தேமுதிகவை இழுக்க வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

தேமுதிக பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பிரேமலதா விஜயகாந்த், “விசிக வென்றது இரண்டு இடங்கள், அதில் ஒருவருக்கு அமைச்சர் பதவி என்றதும், கூட்டணி மாறிவிட்டனர். இதில் தேவையில்லாமல் எதற்கு தேமுதிகவை இழுக்க வேண்டும்? உங்கள் அனைவருக்குமே இரண்டு தொகுதிகளை கூடுதலாகத்தானே ஸ்டாலின் கொடுத்திருக்கிறார். அதனை நாங்களும் கேட்கலாமா?” எனத் தெரிவித்துள்ளார்.
விசிக தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வில் பேசியபோது, திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியதற்கு திமுகத்தான் காரணம் எனத் தெரிவித்து, “நீண்டகாலம் திமுகவோடு பயணித்த கட்சிகளுக்கான தொகுதிகளை குறைத்து, திடுமென கூட்டணியில் இணைந்த கட்சிக்கு யாரும் எதிர்பாராத அளவு தொகுதிகளை தந்தபோது, ஏற்கெனவே இருந்த கட்சிகளுக்கு மகிழ்ச்சி அளித்திருக்குமா? நல்லுறவு, நல்லிணக்கத்தை கூட்டணி கட்சிகளுடன் பேணி பாதுகாக்கும் பொறுப்பு தலைமை தாங்கும் கட்சியிடம் தான் உள்ளது” என பேசியிருந்தார்.
இந்நிலையில், தேமுதிகவின் 22 ஆம் ஆண்டு கட்சி தொடக்க நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கட்சி கொடியினை, கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் திருமாவளவன் எம்.பி. தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த், “வெகு இலகுவாக ஒரு வார்த்தையை சொல்லிவிடலாம். ஆனால், யாரையும் காயப்படுத்திவிடக்கூடாது என்பதற்காக கவனமாக வார்த்தைகளை பயன்படுத்துகிறேன். எனக்காக என் தொகுதியில் திருமாவளவனும், கனிமொழியும் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனை நான் மறக்கமாட்டேன்.
"ஒரு அமைச்சர் பதவி கிடைத்ததால் வேறு கூட்டணிக்கு மாறிவிட்டு எங்களை ஏன் குற்றம்சாட்டுகிறீர்கள்?"
இன்று திருமாவளவனின் நிலைப்பாடு மாறி, ஒரு அமைச்சர் பதவி கிடைத்ததால், வேறு கூட்டணிக்குச் சென்றுவிட்டனர். இதுதான் உண்மை. இதனை யாராலும் மறைக்க முடியாது. வெளியில் இருந்து ஆதரவு, அமைச்சர் பதவி வேண்டாம் என கம்யூனிஸ்ட்கள் சொன்னதுபோல், நீங்கள் (விசிக) சொல்ல வேண்டியதுதானே.
நீங்கள் வென்றது இரண்டு இடங்கள், அதில் ஒருவருக்கு அமைச்சர் பதவி என்றதால் நீங்கள் கூட்டணிக்குச் சென்றுவிட்டீர்கள். இதில் எதற்கு தேமுதிகவை இழுக்கிறீர்கள்? எந்தக் கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் என்பதை முடிவு செய்ய வேண்டியது திமுகவின் தலைமை. அப்படி பார்த்தால், உங்கள் அனைவருக்குமே இரண்டு தொகுதிகளை கூடுதலாகத்தானே ஸ்டாலின் கொடுத்திருக்கிறார். அதனை நாங்களும் கேட்கலாம் இல்லையா?
எனவே நாம் ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு, மற்றவர்கள் மீது குற்றம் சொல்வது மிக மிக தவறானது. இதனை திருமாவளவன் அந்தத் தவறை செய்யமாட்டார் எனவும், திரும்ப இது குறித்து பேசவும் மாட்டார் என நம்புகிறேன்” இவ்வாறு தெரிவித்தார்.
டெங்கு பரவல்: “கர்ப்பிணிகளுக்கான சிகிச்சையில் கூடுதல் கவனம் வேண்டும்” - பொது சுகாதாரத்துறை!
பாதிப்புடன் வரும் கர்ப்பிணிகளை அலட்சியப்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும்.
காய்ச்சல் பாதிப்புள்ள கர்ப்பிணிகளை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை.
