புத்துார் மலைப்பகுதியில் வறட்சி நீருக்காக தரையிறங்கும் காட்டுமாடுகள்

வடமதுரை: வடமதுரை அருகே மலைகளில் ஏற்பட்டுள்ள வறட்சியால் தண்ணீருக்கு தவிக்கும் காட்டுமாடுகள் கிராமங்களுக்குள் வரு கின்றன.
புத்துார் முடிமலை, பண்ணமலை வனப்பகுதிகளில் ஏராளமான காட்டுமாடுகள் வாழ்கின்றன. தற்போது வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியால் நீருற்றுகள் அனைத்தும் வறண்டுள்ளன. இதனால் காட்டுமாடுகள் நீர், உணவு தேடி மலைப்பகுதியை ஒட்டிய விவசாய தோட்டங்களை தேடி தரை இறங்குகின்றன.
இவ்வாறு வரும் காட்டுமாடுகளை விரட்ட முயலும் பொதுமக்கள் தாக்கப்படுவதும் உண்டு. நேற்று முன்தினம் ஏராளமான காட்டு மாடுகள் குருந்தம்பட்டி பகுதி விளை நிலங்களுக்குள் புகுந்தன. கிராமத்தினரே சிரமப்பட்டு விரட்டி மலைப்பகுதிக்கு திருப்பிவிட்டனர்.
அய்யலுார் வனத்துறையினர் கூறுகையில், 'தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள தால் வன உயிரினங்கள் நீர் இருக்கும் இடங்களை தேடி வரும் நிலை உள்ளது. தகவல் தெரிவித்தால் வனத்துறையினர் வந்து அவற்றை மலைப்பகுதிக்கு திருப்பும் பணி செய்வர்.
வன விலங்குகளால் ஏற்படும் சேதத்திற்கு, உரிய அரசு துறை மூலம் சான்று பெற்று வழங்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் அவர்களது வங்கிக்கணக்கில் சேர்க்கப்படுகிறது. வனவிலங்குகளை தாக்குவது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்' என்றனர்.