Politics
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு.. டி.எஸ்.பி., உள்ளிட்ட 4 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு!

மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், டிஎஸ்பி சண்முகசுந்தரம் உட்பட 4 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் உள்ளிட்ட 4 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் டிஎஸ்பி சண்முகசுந்தரம், ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகிய 4 பேரின் பெயர்களும் சேர்க்கப்பட்டன. இதன்மூலம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்தது.
இந்த வழக்கு மதுரை மாவட்ட 5-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி தாமோதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே சேர்க்கப்பட்டிருந்த குற்றப்பிரிவுகளை மாற்றிய நீதிபதி, 4 காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளின்படி, காவலர்கள் ஒருவருக்கொருவர் கூட்டுச் சதி செய்து அஜித்குமாரை சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கி, சித்திரவதை செய்ததாகவும்,
அவரது மரணத்துக்குப் பின்னர் காவல் நிலைய பதிவேடுகளில் போலி பதிவுகளை உருவாக்கி குற்றத்தை மறைக்க முயன்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அஜித்குமார் உயிரிழந்த உடனேயே, உள்ளூர் அரசியல் கட்சி உறுப்பினர்களின் உதவியுடன், டிஎஸ்பி சண்முகசுந்தரம் அவரது பெற்றோருடன் சமரசம் செய்ய முயன்றதாகவும் அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதையும் படிங்க: காவல்நிலையத்தில் புகார் கொடுத்த மறுநாளே இளைஞர் வெட்டிக் கொலையா? - அன்புமணி கண்டனம்
மேலும், சாட்சியங்களைத் தடுக்கும் நோக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களது கைபேசிகளில் தரவுகளை அழித்ததாகவும், திருப்புவனம் காவல் நிலைய பதிவேடுகளில் முன்தேதியிட்ட சமூக சேவைப் பதிவேடு உருவாக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
4 பேரும் காவல்துறைப் பணியாளர்கள் என்பதால், அவர்கள் வெளியில் இருந்தால் சாட்சிகளைப் பாதிக்கவோ, சாட்சியங்களைத் திருத்தவோ வாய்ப்புள்ளதாக நியாயமான அச்சம் இருப்பதாக தெரிவித்த நீதிபதி, அவர்களை வரும் 16-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
