Crime, law and justice
பைக் டாக்சியை முறைப்படுத்த குழு உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை: தமிழகத்தில் தனியார் செயலிகள் மூலம் இயக்கப்படும் பைக் டாக்சி சேவையை முறைப்படுத்த விதிமுறைகள் உருவாக்க தாக்கலான வழக்கில், இதற்காக குழு அமைத்துள்ளதாக அரசு தரப்புஉயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது. மதுரை நவீன்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் பைக்டாக்சி சேவையை முறைப்படுத்த சட்ட விதிமுறைகள் இல்லை. பிற டாக்சி சேவைகளை போல அல்லாமல், பைக் டாக்சி சேவையை தனிநபர்களால் செயல்படுத்த முடியாது. அவை முழுமையாக தனியார் நிறுவன (அகரிகேட்டர்) செயலிகள் மூலமே இயக்கப்படுகின்றன.
'அகரிகேட்டர்' நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது. அவற்றில் பணிபுரியும் பைக் டாக்சி டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இது அரசியல் அமைப்பின் சமத்துவ கொள்கைக்கு எதிரானது.
'அகரிகேட்டர்' நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க, அவற்றின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தமாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. பயணிகளின் பாதுகாப்பு, கட்டண நிர்ணயம், இன்சூரன்ஸ், புகார்களுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பல வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் பைக் டாக்சி சேவையை முறைப்படுத்த விதிமுறைகளை உருவாக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது.
தமிழக போக்குவரத்துத்துறை கமிஷனர் தாக்கல் செய்த பதில் மனு: பைக் டாக்சியை முறைப்படுத்துவது தொடர்பாக தென் மண்டல போக்குவரத்து இணை கமிஷனர் செந்தில்நாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் பைக் டாக்சிக்கு அனுமதி வழங்குவது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்படும். இதற்கு 6 மாதங்கள் அவகாசம் தேவை. இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அக்.7க்கு ஒத்திவைத்தனர்.