மாவட்டத்தில் 10 ஆண்டு இல்லாத அளவு வறட்சி அபாயம் : பொய்த்தது தென்மேற்குப் பருவ மழை

திருப்பூர்:கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, திருப்பூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்துள்ளது. பருவம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மீதமுள்ள நாட்களிலாவது வருண பகவான் கருணை காட்டுவாரா என, விவசாயிகள் வானத்தை நோக்கி ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழைப்பொழிவு, 669.64 மி.மீ., என கணிக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில், 23.30 மி.மீ., கோடையில், 146.62 மி.மீ., தென்மேற்கு பருவத்தில், 180.59 மி.மீ., வடகிழக்கு பருவத்தில், 327 மி.மீ., மழை பெய்ய வேண்டும் என்பது இயல்பான அளவு.
தென்மேற்கு பருவமழை, மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பதற்கும், வறட்சியை தள்ளிப்போடுவதற்கும் முக்கியமானது. அடுத்ததாக வரும் வடகிழக்கு பருவமழையை நம்பி, மானாவாரி பயிர் சாகுபடியும் மேற்கொள்ளப்படுகிறது. கால்நடைகளுக்கான தீவனமும், மேய்ச்சலும் மழையை நம்பியே உள்ளது.
ஆனால், இந்தாண்டு தென்மேற்கு பருவம் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது. ஜூனில், 26.64 மி.மீ., மழை பெய்ய வேண்டிய நிலையில், 22.05 மி.மீ., மட்டுமே பதிவானது. ஜூலையில், 31.14 மி.மீ.,க்கு பதிலாக வெறும் 0.98 மி.மீ., ஆகவும், ஆகஸ்டில், 50 மி.மீ.,க்கு பதிலாக, 11.95 மி.மீ., ஆகவும் மழை சுருங்கிப்போனது.
செப்டம்பரில், 72.80 மி.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், இதுவரை ஒரு மழைகூட தலைகாட்டவில்லை. நேற்று மாலை நிலவரப்படி, தென்மேற்கு பருவத்தில், 34.98 மி.மீ., மட்டுமே பதிவாகியுள்ளது. கடந்த 2020ல், இதே பருவத்தில் அதிகபட்சமாக, 299 மி.மீ., மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.
குளிர்பருவத்தில், 44.96 மி.மீ., மழையும், கோடையில், 128.66 மி.மீ., மழையும் கிடைத்ததால், மாவட்டம் ஓரளவு தாக்குப்பிடித்துள்ளது. இருப்பினும், இந்தாண்டு இதுவரை, 300 மி.மீ., மழை பெய்திருக்க வேண்டிய நிலையில், 208.60 மி.மீ., மட்டுமே பதிவாகியுள்ளது.
விவசாயிகள் கூறுகையில், ''கடந்த ஆண்டும் இயல்பான மழை கிடைக்கவில்லை. இந்தாண்டு தென்மேற்கு பருவமும் கைவிட்டுவிட்டது. வடகிழக்கு பருவத்திலாவது இயல்பான மழை பெய்யாவிட்டால், வறட்சி தீவிரமாகும். அத்திக்கடவு திட்டத்தால் குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகள் ஓரளவு தப்பியுள்ளன. கால்நடைகளுக்கான மானிய தீவனத்தை மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என்றனர்.
மீதமுள்ள தென்மேற்கு பருவ நாட்களில் மழை பெய்யுமா அல்லது வறட்சியின் நிழல் மேலும் நீளுமா என்ற கவலையுடன், திருப்பூர் விவசாயிகள் வானத்தை நோக்கி காத்திருக்கின்றனர்.